தாய்மொழி பெருமையை கவுரவ பதக்கமாக அணிய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

நமது பன்முக மொழிப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையிலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11) நினைவுகூரும் வகையிலும் டிசம்பர் 4 முதல் 11 வரை ஒரு வார கால கொண்டாட்டமான இந்திய மொழி விழா அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றது. ‘மொழிகளின் மூலம் ஒற்றுமை’ என்பது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளாகும்.

இது இந்திய நாகரிக நெறிமுறைகளின் சாராம்சத்தை எடுத்துரைக்கிறது. மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, வங்காளம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில மாதங்களுக்கு முன் வழங்கி வரலாறு படைத்தது. இதன் மூலம் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா என்ற ஆறு செம்மொழிகளின் எல்லையை விரிவுபடுத்தியது. இந்தியாவின் மேன்மையான மொழிப் பாரம்பரியத்தை வெகுவாக அங்கீகரிக்கும் இந்த அறிவிப்பு, இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள்; அவை இந்தியத்தன்மையின் ஆன்மாவை உருவாக்குகின்றன. எனவே அவை போற்றத்தக்கவை. மொழிப் பன்முகத்தன்மை தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற இலக்கை அடைய உதவுகிறது. எனவே, நம் மக்கள் ஒவ்வொருவரும் மொழிப் பெருமிதத்தை கௌரவப் பதக்கமாக அணிந்துகொள்ள வேண்டும். உலக அரங்கிலும் பிரதமர் இதை எடுத்துரைக்கிறார். “ஐ.நா.வில் கூட நான் இந்திய மொழிகளைப் பெருமையுடன் பேசுகிறேன். கேட்பவர்கள் கைதட்ட சிறிது நேரமாகும். ஆகட்டுமே” என்றார் பிரதமர் மோடி. இந்தக் கூற்று இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் அவரது உறுதிப்பாட்டையும் மொழிப் பெருமிதத்தின் மாண்பையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்தியா பல மொழிகள் இணைந்து வாழும் நாடு மட்டுமல்ல, அவை செழித்து வளரும் நாடும் கூட. இது பன்மொழிக் கொள்கையின் உன்னத உருவகம். நமது மொழிப் பன்முகத்தன்மை நாட்டின் ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில் தேசிய அடையாளத்தை இணைக்கிறது. இந்தக் கலாச்சார வலிமை காலனித்துவ ஆட்சியின் போது பாதிப்பை எதிர்கொண்டது. 1835, பிப்ரவரி 2 அன்று, தாமஸ் பாபிங்டன் மெக்காலே அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலுக்கு “இந்தியக் கல்வி குறித்த மெக்காலேயின் மினிட்ஸ்” என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பாணையை வழங்கினார். இது பிரிட்டிஷ் நலன்களுக்கு ஏற்ப இந்தியர்களின் வர்க்கத்தை உருவாக்க முயன்றதால் தாய்மொழிகளை விட ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளித்தது. இதனால் பல தலைமுறைகளை அவர்களின் கலாச்சார, மொழியியல் வேர்களில் இருந்து அந்நியப்படுத்தியது. அப்போதிருந்து, ஆரோக்கியமற்ற ஒரு காலனிய மரபு பல நூற்றாண்டுகளாக நீடித்தது. இது நமது கலாச்சார, மொழியியல் பெருமையை கடுமையாக ஊனப்படுத்தியது.

இந்திய மக்கள்தொகையில் எண்பது சதவீதம் பேர் தங்களை ஆங்கிலம் அல்லாத, சொந்த மொழி பேசுபவர்களாக அடையாளம் காண்கின்றனர். ஆழ்ந்த கல்வியின் மையமாகத் தாய்மொழி உள்ளது. நமது மொழிகள் வெறும் தகவல்தொடர்பு கருவிகள் அல்ல – அவை வரலாறு, மரபுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் களஞ்சியங்கள். இவை தலைமுறைகளின் கூட்டு ஞானத்தைப் பாதுகாத்து ஒரு தனித்துவமான உலகக் கண்ணோட்டத்தை வழங்குகின்றன.

சொந்த மொழியில் கல்வி… படைப்பாற்றலும் உணர்ச்சி நுண்ணறிவும் நிறைந்த குழந்தைகள், தங்கள் சொந்த மொழியில் கல்வியைத் தொடங்கும்போது செழித்து வளர்கிறார்கள். அவர்களின் தாய்மொழியில் கிடைக்கும் தொடக்கநிலை கல்வி வீட்டிலிருந்து வகுப்பறைக்கு தடையற்ற பாலத்தை உருவாக்குகிறது. ‘தாய்’ மொழியிலிருந்து ‘பிற’ மொழிக்கு அவர்களை வழிநடத்துகிறது – பேச்சிலிருந்து எழுத்து, சொல்லகராதி முதல் சொற்பொருள், மொழிக்குப் பொருள் புரிதல் ஆகியவற்றிற்கு மாற்றுகிறது. “ஒரு குழந்தை பாடப்புத்தகங்களிலிருந்து அல்ல, தனது தாயிடமிருந்து பேசக் கற்றுக்கொள்கிறது” என்று ரவீந்திரநாத் தாகூர் தெளிவாகக் குறிப்பிட்டார். தாய்மொழிக் கல்வி அடிப்படை புரிதலிலிருந்து சிக்கலான சிந்தனைக்கும் இயல்பாக முன்னேறச் செய்கிறது.

நாடு முழுவதும் நமது மொழிகள் மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளைக் கொண்டுள்ளன. குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பது பாரம்பரியத்துடனான அவர்களின் தொடர்பைப் பாதுகாப்பது மட்டுமின்றி, எதிர்காலத்திற்கும் அவர்களைத் தயார்படுத்துகிறது. சொந்த மொழியில் ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்பதன் மூலம், பிற மொழிகளையும் பாடங்களையும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளவும் தேர்ச்சி பெறவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த முடியும்.

கல்வியின் இதயம் தாய்மொழி: தேசிய கல்விக் கொள்கை 2020 இந்த தொலைநோக்குப் பார்வையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. நமது மொழிப் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில், புதிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியின் இதயமாகத் தாய்மொழியை வைக்கிறது. மொழி என்பது கற்றலுக்கான ஒரு கருவி மட்டுமல்ல; அடையாளத்தை வடிவமைப்பதற்கும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அறிவாற்றல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் முக்கியமாகும் என்பதை ஒப்புக்கொள்கிறது.

நாட்டின் பன்முக மொழிப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் சூழலில், கல்வியுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு தேசிய கல்விக் கொள்கை 2020 மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. 22 மொழிகளில் அடிப்படை சொற்றொடர்களைக் கற்பிக்கும் மொழி சங்கத் திட்டம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் எந்திர மொழிபெயர்ப்பு மையம் முதல், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மூலம் பல இந்திய மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அனுவதினி செயலி மூலம் மொழிபெயர்த்தல் வரை – மொழிபெயர்ப்பு மற்றும் கல்விசார் படைப்புகள் மூலம் இந்திய மொழிகளில் ஆய்வுப் பொருட்களை மேம்படுத்துவது முதல் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய மொழி வாரியத்தின் முன்முயற்சி வரை, அனைவரையும் உள்ளடக்கியதாக கல்வியை மாற்றும் வகையில், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு வலுவான சூழல் அமைப்பை உருவாக்க நன்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 79 இந்திய மொழிகளில் தொடக்கநிலைப் பாடங்களை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி, கிராமப்புற, பழங்குடி மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழிகளில் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் மகத்தான நடவடிக்கையாகும்.

நமது கல்வி முறையை காலனித்துவத்திலிருந்து விடுவிப்பதன் மூலம், கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வென்றெடுக்கும் ஒரு தலைமுறை சிந்தனையாளர்களை வளர்க்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த மாற்றம் வெறுமனே ஒரு கொள்கை மாற்றம் அல்ல – இது ஒரு கலாச்சார மறுமலர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

நாம் தற்போது வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வேளையில், நமது தாய்மொழிகள் வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த வாகனங்களாக மாறத் தயாராக உள்ளன. இந்தியா உலக அரங்கில் அடியெடுத்து வைக்கும் போது, நமது மொழிப் பன்முகப் பாரம்பரியத்தை நமது முன்னேற்றத்தின் ஆதாரமாக ஆக்கிக் கொள்வோம்.

கட்டுரையாளர், மத்திய கல்வி அமைச்சர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.