புதுடெல்லி: இந்தி திரையுலகில் பிரபல நடிகராகவும் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் ராஜ் கபூர். குறிப்பாக இந்தியாவின் சார்லி சாப்ளின் என வர்ணிக்கப்பட்டார்.
இவருடைய 100-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் சார்பில் திரைப்பட விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த, கரிஷ்மா, கரீனா, சைப் அலி கான், ரன்பிர் உள்ளிடட கபூர் குடும்பத்தினர் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், “இன்று பிரபல நடிகர் ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். அவரது திறமை தலைமுறைகளைக் கடந்து பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது சர்வதேச திரைத் துறையில் அழிக்க முடியாத அடையாளத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.