Border Gavaskar Trophy Latest News Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் (India vs Australia) மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 13.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முழுமையாக ஆட்டம் தடைப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசப்படாததால் திட்டமிட்ட நேரத்தை விட அரைமணி நேரம் முன்னதாக ஆட்டம் தொடங்கியது.
அதாவது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கியது. கவாஜா 21, மெக்ஸ்வீனி 9, லபுஷேன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் ஜோடி சுமார் 241 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. புதிய பந்து எடுக்கப்பட்ட பின்னர் ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களுக்கும், மார்ஷ் 5 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 152 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
போட்டியை டிரா செய்யுமா இந்திய அணி?
ஒருமுனையில் அலெக்ஸ் கேரி நிலைத்து நின்று விளையாட பாட் கம்மின்ஸ் ஓரளவு துணையாக நின்றார் அவர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் அடுத்து களமிறங்கி அலெக்ஸ் கேரிக்கு துணையாக நின்றார். அந்த வகையில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 101 ஓவர்களில் ஆஸ்திரேலியா (Team Australia) 405 ரன்களை அடித்து 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், ஸ்டார்க் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
மூன்று நாள் ஆட்டம் இன்னும் மீதம் உள்ள நிலையில், இந்திய அணியும் ஆஸ்திரேலியாவை போன்ற பெரிய இன்னிங்ஸை விளையாடினால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும். இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை தாண்டி அடித்தால்தான் குறைந்தபட்சம் டிராவை நோக்கியாவது செல்ல முடியும். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை பொறுத்தே வெற்றி, தோல்வி தீர்மானம் ஆகும் எனலாம்.
ரோஹித் சர்மாவின் தவறுகள்
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா பெரிய தவறை செய்துவிட்டதாக மேத்யூ ஹெய்டன் கருத்து தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் “இந்த தொடரை ஆஸ்திரேலியாவே கைப்பற்றும், அதுதான் எனது விருப்பமும் கூட… மேலும், இந்த போட்டியின் டாஸில் இந்திய கேப்டன் தவறான முடிவை எடுத்துள்ளார். பேட்டிங் ஆடுவதற்கு இது நல்ல ஆடுகளம் ஆகும். அதுவும் முதல் மூன்று நாள்கள் இங்கு சிறப்பாக பேட்டிங் செய்யலாம்” என்றார். மேத்யூ ஹெய்டனின் ஹோம் கிரவுண்ட் காபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாஸில் மட்டுமின்றி அணி தேர்விலும் இந்தியா சறுக்கியுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஜடேஜா இந்த ஆடுகளத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் பேட்டிங்கிற்காக என்றால் வாஷிங்டன் சுந்தரையே பிளேயிங் லெவனில் எடுத்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். இந்திய அணி இந்த போட்டியை இழந்தால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது மிகவும் கடினமாகிவிடும்.