சென்னை: அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே-வை சேர்ப்பது குறித்து தமிழக அரசுதான் கொள்கை ரீதியாக முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
அரசுப் பணிக்கான நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி கபடி, சிலம்பம், மல்யுத்தம், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கைப் பந்து. குத்துச்சண்டை, கிரிக்கெட். ஜூடோ, பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் தடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர். வீராங்கனைகளுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கான இந்த ஒதுக்கீட்டில் கராத்தே-வையும் சேர்க்கக்கோரி கராத்தே சாம்பியனான அருண் பிரபாகரன் சென்னை- உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே-வில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் அரசு பணிக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு பணிக்கான விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே-வை சேர்ப்பது குறித்து தமிழக அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.