சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் தலைவராக சுரேஷ் வேதநாயகமும் செயலாளராக அசிப்பும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நீண்ட காலமாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. தேர்தல் நடக்காததற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டன.
எனவே மறைந்த எம்.யூ.ஜே. மோகன் உள்ளிட்ட சிலர் தேர்தல் நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
ஆனால், இந்தப் பொறுப்பை நிறைவேற்ற பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகத்திலிருந்தவர்கள் தனக்குப் போதுமான ஒத்துழைப்பை வழங்க மறுக்கிறார்கள் எனக்கூறி அந்தப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் அவர்.
எனவே மீண்டும் தேர்தல் நடத்தக்கோரிய குரல்கள் அதிகரிக்க,கடைசியில் வழிகாட்டுதல் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
’தி இந்து’ என்,ராம், ‘நக்கீரன்’ கோபால் உள்ளிட்டோர் அடங்கிய இந்த வழிகாட்டுதல் குழு தேர்தல் நடப்பதற்குத் தேவையான வேலைகளை முடுக்கி விட்டது.
முதற்கட்டமாக தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டன.
தொடர்ந்து உறுப்பினர் பட்டியல் சரிசெய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் பொறுப்பேற்றார்.
தேர்தலில் மாற்றத்துக்கான அணி, நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, என மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த அணிகள் தவிர சிலர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் களம் இறங்கினர். இவர்களில் மாற்றத்துக்கான் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் தேர்தலுக்கு முன்பே போட்டியிலிருந்து விலகி விட்டார்.
தலைவர் பதவிக்கு வி.எம்.சுப்பையா, சுரேஷ் வேதநாயகம், ஆர்.கே.ராதாகிருஷ்ணன் மூவரும் அணிகள் சார்பிலும் சுயேட்சையாக சிலரும் போட்டியிட்டனர்.
தலைவர், செயலாளர், பொருளாளர் தவிர இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு இணைச் செயலாளர், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 11 பதவிகளுக்கு இன்று காலை பத்து மணிக்குத் தொடங்கிய வாக்குபதிவு மாலை ஐந்து மணி வரை நடந்தது. மொத்த வாக்காளர்களான 1502 பேரில் 1371 வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது. இது 91 சதவிகிதம்.
பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மாலையே எண்ணப்பட்டன.
முதலில் இணைச் செயலாளர் பதவிக்கான ரிசல்ட் தெரிய வந்தது. நீதிக்கான அணி சார்பாக இப்பதவிக்குப் போட்டியிட்ட நெல்சன் சேவியர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வரிசையாக ஒவ்வொரு பதவிக்கான முடிவும் அறிவிக்கப்பட்டதில், ஒரேயொரு நிர்வாகக் குழு உறுப்பினர் இடத்துக்கு மட்டும் ஒற்றுமை அணியின் கவாஸ்கர் தேர்வாக, மற்ற அனைத்து பதவிகளையும் நீதிக்கான கூட்டணியே கைப்பற்றியது.
தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.