வி.சி.க விலிருந்து ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என்று எண்ணுகிறேன். இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் ‘சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்’ அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.