Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்குப் பதிலாக தற்போது சில மருத்துவர்கள் ஆன்டி-டிப்ரெசன்ட் (anti-depressant) மாத்திரைகள் கொடுக்கிறார்கள்… அவை நல்லையா? தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக ஆன்டி-டிப்ரெசன்ட் மாத்திரைகள் கொடுக்கக்கூடாது. டிப்ரெஷனை தடுக்கும் ஆன்டி- டிப்ரெசன்ட் மாத்திரைகள் என்ற பெயரில் எஸ்எஸ்ஆர்ஐ (Selective serotonin reuptake inhibitors) மருந்துகளைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.
தூக்கத்துக்கான மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்கு முன், தூக்கமின்மைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சிலர் நன்றாகத் தூங்குவார்கள். ஆனால், சரியாகத் தூங்காததுபோல ஃபீல் பண்ணுவார்கள். தூக்கமில்லை என சொல்லிக்கொண்டு மருத்துவரிடம் வரும் நபரை, அவருடன் வரும் நபர், ‘நல்லா குறட்டை விட்டுத் தூங்கறாங்க.. ஆனா, தூங்கி எழுந்ததும் சரியாவே தூங்கலை’னு சொல்றாங்க’ என்று சொல்வார்கள். சிலருக்கு இப்படிப்பட்ட பிரச்னையும் இருக்கலாம். எனவே, தூக்கம் வரவில்லை என்றால் முதலில் அதற்கான காரணத்தை முழுமையாக ஆராய வேண்டும்.
தூக்கமின்மைக்கு உடலிலோ, மனதிலோ ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளை யோசிக்காமல், தூக்கமில்லை என்றதும் மாத்திரைகளைக் கொடுப்பது தீர்வல்ல. அலர்ஜிக்கான மாத்திரைகள், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள்… இப்படி பல மாத்திரைகளும் தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டவை. தூக்கம் என்பது அந்த மாத்திரைகளின் பக்க விளைவு. ஆன்டி-டிப்ரெசன்ட் மாத்திரைகளின் பக்க விளைவும் தூக்கம்தான். எனவே, தூக்கமின்மைக்கு அந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பது மிகவும் தவறானது. சரியான மருத்துவரிடம் தூக்கமின்மைக்கான சிகிச்சை எடுப்பதுதான் தீர்வு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.