தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சூழலில் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர் செந்தில்குமார் நம்மிடம் பேசுகையில்,
“காங்கிரஸ் என்றாலே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்ற நிலை தான் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் இருந்து வந்தது என்றால் அது மிகையே அல்ல. எல்லோருக்கும் எதிர்ப்பு என்றாலே ஒரு வித பயம் வரும் ஆனால் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களோ எதிர்ப்பையும் போராட்டத்தையும் நேசித்தார். ஏனென்றால் அவருடைய வாழ்க்கையே எதிர்ப்பையும், போராட்டத்தையும் கொண்டதுதான். மற்ற தலைவர்களுடைய வாரிசுகள் குறைந்தபட்சம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகித்தான் தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்திற்குள்ளேயே வருவார்கள். ஆனால் தலைவர் இ.வி.கே.எஸ் 1978-ல் தன்னுடைய தந்தையார் ஈ.வி.கே.சம்பத் அவர்கள் மறைந்துவிட்ட பின்பு அரசியலுக்குள்ளே வந்தார். அப்போது அவருக்கு ஒன்றும் பெரிய வரவேற்பு கிடையாது. அவரிடம் அப்போது இருந்தது எல்லாம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று தனது குடும்ப பாரம்பரியம். இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கை மீதான பற்று. மூன்றாவதாக அவருடைய தன்னம்பிக்கை.
அன்னை இந்திரா காந்தி மீது அபார பற்று கொண்டவர். அவருடைய தைரியம் மீது அபார நம்பிக்கை கொண்டவர். அன்னை இந்திரா காந்தியை பற்றி சொல்லும் போதெல்லாம் டெர்ரர் என்று சொல்லுவார். அவ்வப்போது அன்னை இந்திரா காந்தியின் தைரியமும் விடாமுயற்சியை பற்றி அலாதித்துக் கொள்வார். 1984ல் நடிகர் திலகத்தின் உதவியால் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கட்டுப்பாட்டையும் மீறி சத்தியமங்கலத்தில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். இறுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றார். அதன் பின்பு 1989-ல் நடிகர் திலகம் காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியேறிய போது இரு மனதோடு காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து வெளியேறி நடிகர் திலகத்தோடு செயல்பட்டார். அந்த இயக்கத்தின் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்பும் அவரால் போராடித்தான் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதாக வேண்டி இருந்தது.
1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மூப்பனார் வெளியேறிய பிறகு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைமை பொறுப்பினை ஏற்றார். முதன்முறையாக 1998-ல் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு 50000 வாக்குகளுக்கு மேல் பெற்றார். அவருடைய வாழ்க்கையில் அவருடைய தைரியமும் தன்னம்பிக்கையும் தான் அவரை வழிநடத்தியது என்று சொன்னால் அது மிகையல்ல.
1998 பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு அவருக்கு திடீரென்று இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தபோது இதயம் சில நிமிடங்கள் நின்று விட்டது. பின்பு மருத்துவர்களுடைய சீரிய முயற்சிகள் மீண்டும் இயங்கத் துவங்கியது. அப்படி இயங்கத் துவங்கிய இதயம் இன்று தன்னை நிறுத்தி கொண்டு விட்டது. இதன்படி பார்த்தால் தலைவர் கடந்த 26 வருடங்களாக வாழ்ந்தது மறுபிறவி என்றுதான் சொல்ல வேண்டும்.
நின்று போன அந்த இதயத்தை அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் மீண்டும் தட்டி எழுப்பி இருக்க வேண்டும் என்று அப்பொழுதெல்லாம் பேசிக் கொள்ளுவோம். 2001 தேர்தலுக்குப் பின் அ.தி.மு.கவோடு கூட்டணி. பிறகு ஏற்பட்ட மனக்கசப்பில் கூட்டணி முறிவை அன்னை சோனியா காந்தியின் வீட்டு வாசல் முன்பு 2001 ஜூன் 20-ம் தேதி ஜெயலலிதா அறிவிக்கிறார். அப்பொழுதே தலைவர் இளங்கோவன் கொந்தளித்து விட்டார்.
2001 ஜூன் 30-ம் தேதி டாக்டர் கலைஞர் கைது செய்யப்பட்ட போது ‘டாக்டர் கலைஞர் அவர்களை கைது செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என அறிக்கை வெளியிட்டார். அப்பொழுது திமுக, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. ஆனாலும் ஜெயலலிதாவை கண்டித்து அறிக்கை கொடுத்தார். அப்போது ஜெயலலிதாவை கண்டு பல தலைவர்களும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் தலைவர் ஒருநாளும் பயந்தது இல்லை. அதன் பின்பு தான் தலைவர் இளங்கோவன் அவர்களே தமிழ்நாடே உற்று நோக்க தொடங்கியது. சரியோ தவரோ மனதில் பட்டதை பேசக்கூடிய துணிச்சலும் தைரியமும் உள்ளவர். தொண்டர்களை எப்போதும் கலகலப்பான சூழலில் தான் வைத்திருப்பார். இப்படி தைரியம், துணிச்சல், வீரம் இவற்றின் மொத்த அடையாளமாக அன்பு தலைவர் இளங்கோவன் திகழ்ந்து வந்தார். அவரை ஒரு இக்கட்டான சமயத்தில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இழந்து இருக்கிறது” என்றார்.