ஸ்ரீவில்லிபுத்தூர்: “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் தரிசித்துச் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தனர். இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் ஆல்பத்தில் ஆண்டாள் பாசுரங்களை இசைக்கலைஞர்கள் பாடினர். தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆண்டாள் கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதி, நந்தவனம், பெரிய பெருமாள் சந்நிதி ஆகியவற்றில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் சென்று இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
ஆண்டாள் சந்நிதியில் கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்திற்கு வெளியே வசந்த மண்டபத்தில் நின்றே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று இரவு ஜீயர்களுடன் இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்ட அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறினார். அதை சின்ன ஜீயர் இளையராஜாவிடம் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர், இளையராஜா ஆகிய 3 பேருக்கும் ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்தனர். இணை ஆணையர் ஆண்டாள் படம் மற்றும் பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து ஆடிப்பூர கொட்டகையில் நடந்த திவ்ய பாசுரம் இசை நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியை ஜீயர்களுடன் சேர்ந்து இளையராஜா கண்டு களித்தார்.
இந்நிலையில், இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.