இவிஎம் சர்ச்சை: உமர் அப்துல்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பதிலடி

புதுடெல்லி: “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மூலம் 100 எம்,பி.க்களைப் பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்த பின்னர் அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி இப்போது குறை கூறுவது தவறு” என்று கூறிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர், “முதல்வரான பின்னர் கூட்டணி கட்சியினருடன் ஏன் இந்த அணுகுமுறை?” என்று வினவியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா யுபிடி பிரிவு தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக பேசியுள்ளன. காங்கிரஸ் செயல்திட்ட கமிட்டி தீர்மானம் தெளிவாக தேர்தல் ஆணையத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. முதல்வரான பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் ஏன் இத்தகைய அணுகுமுறை. நீங்கள் உண்மைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸை சாடிய உமர் அப்துல்லா: முன்னதாக உமர் அப்துல்லா ஒரு பேட்டியில் காங்கிரஸ் கட்சியை வெகுவாக விமர்சித்திருந்தார். “மக்களவைத் தேர்தலில் நீங்கள் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பெறும்போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கொண்டாடுகிறீர்கள். அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறீர்கள். இத்தகைய அணுகுமுறையை நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்காதவர்கள் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.” எனக் கூறியிருந்தார்.

பயனற்ற அணுகுமுறை.. மேலும் அவர், “காங்கிரஸ் கட்சிக்கு தேசியளவில் செல்வாக்கு உள்ளது. நாடாளுமன்றத்திலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் தலைமை பதவியில் காங்கிரஸ் உள்ளது. ஆனால், அதன் செயல்பாடு குறித்து கூட்டணி கட்சிகள் கவலைப்படுகின்றன. இண்டியா கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு தலைமை பதவியில் இருக்க வேண்டும். தானாக கிடைத்தது என்பதற்காக அந்த பொறுப்பில் இருக்கக் கூடாது.

எதிர்க்கட்சிகளின் தலைமை பதவியில் இருக்க காங்கிரஸ் கட்சி போதிய அளவில் உழைக்கவில்லை என கூட்டணி கட்சிகள் சில உணர்கின்றன. இதை சரிசெய்வது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்க வேண்டும்.

இண்டியா கூட்டணியின் கூட்டம் அடிக்கடி நடைபெறுவதில்லை. தேவை ஏற்பட்டால் எப்போதாவது கூடும் இந்த கூட்டணியின் தற்போதைய அணுகுமுறை பயனற்றதாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு 6 மாதங்கள் தீவிரமாக செயல்படுவதோடு எதிர்க்கட்சிகளின் கூட்டணி நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி இண்டியா கூட்டணியின் செயல்பாடு இருக்க வேண்டும். இண்டியா கூட்டணி வலுவாக செயல்பட சீரான இடைவெளியில் கலந்துரையாடல் அவசியம். வழக்கமான தொடர் சந்திப்புகள் கூட்டணிக்குள் நடைபெற வேண்டும்.” என்றார்.

காங்கிரஸுக்கும் பங்கு உண்டு.. “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இக்கும்வரை இந்த விவகாரத்தில் விலகியிருப்போம் என காங்கிரஸ் கூறியுள்ளது. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்போது, அவர்களின் நிலைப்பாடு மாறும். அதனால், நாடாளுமன்றத்தில் இதர விஷயங்களுக்காக போராடும் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் பேசும் என நாங்கள் நம்புகிறோம்.” என உமர் அப்துல்லா கூறியிருந்தார்.

இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸுக்கு விரிசல் ஏற்படுவதாக ஏற்கெனவே விமர்சனங்கள் உள்ள நிலையில் தற்போது உமர் அப்துல்லாவின் பேச்சும் அதற்கு மாணிக்கம் தாக்கூரின் பதிலடியும் கவனம் பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.