நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனான தர்ஷன் ராம்குமார் கணேசனுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை குடும்பத்தினர் விரைவில் அறிவிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது குறித்து அன்னை இல்லத்துடன் தொடர்பிலிருக்கும் சிலரிடம் பேசினோம்.
”சிவாஜி கணேசனுக்கு ரெண்டு மகள்கள் ரென்டு மகன்கள். மூத்த மகன் ராம்குமாருக்கு துஷ்யந்த்தும் அவருக்குப் பிறகு ட்வின்ஸும் என மூணு பசங்க. துஷ்யந்த் ஏற்கெனவே சினிமாவுக்குப் பரிச்சயமானவர்தான். ‘சக்ஸஸ்’ங்கிற படத்தின் மூலமா சினிமாவுக்கு வந்தார் அவர். தொடர்ந்து சில படங்கள்ல நடிச்சார். ஆனாலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கல. ஆனாலும் இன்னும் சினிமா முயற்சியைக் கை விடாமத்தான் இருக்கார்.
துஷ்யந்துக்குப் பிறகு ரெண்டு பசங்க இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தாங்க. அவங்கள்ல ஒரு மகன் இப்ப வெளிநாட்டுல படிச்சுட்டு அங்கேயே வேலையும் பார்த்துட்டு இருக்கார்.
இன்னொரு மகன் பேரு தர்ஷன். இவருக்கும் நடிப்பு ஆர்வம் படிக்கிறப்பவே வந்திடுச்சு. அதனால் ஸ்கூல் படிப்பு முடிச்சதுமே புனே திரைப்படக் கல்லூரி, டெல்லியில நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமான்னு பயிற்சி எடுக்கக் கிளம்பிட்டார். படிச்சிட்டிருந்தப்பவே ஸ்டேஜ் ட்ராமாவுலயும் பங்கெடுத்திருக்கார்.
தமிழ் தாண்டி இங்கிலீஷ், இந்தியிலயும் மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிப்புப் படிப்பெல்லாம் முடிச்சுட்டு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை திரும்பிட்டவர், இப்ப தீவிர சினிமா முயற்சியிலதான் இருக்கார். சீக்கிரத்துலயே தமிழ்ல்ல அவரது அறிமுகப்படம் குறித்த தகவல் முறைப்படி வரும்னு சொல்லிட்டிருந்தாங்க.
எல்லாரும் அந்தப் படம் குறித்த தகவலை எதிர்பார்த்துட்டு இருக்கப்போ, அதுக்கு முன்னாடி அவருடைய கல்யாணம் குறித்த தகவல் வரப்போகுது” என்றார்கள் அவர்கள்.
வட இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட காதலா தெரியவில்லை, தர்ஷன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் டெல்லியைச் சேர்ந்தவர்தான் என்கிறார்கள். கடந்த வாரம் தர்ஷனின் திருமண நிச்சயதார்த்தம் அன்னை இல்லத்தில் ரொம்பவே சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. ராம்குமார், பிரபு வீட்டார் தவிர நெருங்கிய சில சொந்தங்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார்களாம்.