சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் கூறியது: “தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக 2,86,069 ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், 73,263 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையால் 2,25,655 ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், 45,634 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆக, மொத்தம் இதுநாள்வரை 6,30,621 ஹெக்டேரில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2,906 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியை 17-ம் தேதிக்குள் (நாளை) முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத் தரும் வகையில் உரிய கருத்துருவை விரைவில் அரசுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக் கூடாது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் நாளை (டிச.17) கூட்டம் நடத்த வேண்டும்” என்று அமைச்சர் கூறினார். இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை இயக்குநர் பி.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.