கரூர்: திமுக அரசு மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என புரட்சி பாரதம் கட்சி மாநிலத்தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
புரட்சி பாரதம் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை (டிச. 16) மாலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்லமுத்து தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற மாநில தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் விழுப்புரம் மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, 32 பேர் இறந்துள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதற்கு காரணம் சாத்தனூர் அணையில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதுதான். இதற்கு காரணமான துறை சார்ந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பின்போது, ஆளுங்கட்சி நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டமும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.10,000, விவசாயிகளுக்கு ரூ.20,000 அரசு வழங்கவேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழிபடச் சென்ற இசையமைப்பாளர் இளையராஜாவை பட்டியலினத்தவர் எனக்கூறி கருவறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை ஆட்சியரையும் கோயிலுக்குள் செல்ல விடாமல் எஸ்ஐ நிலையில் உள்ள காவலர்களே தடுத்துள்ளனர்.
பெரியார் பூமி, பெரியார் மண், சமத்துவ ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி எனக்கூறும் அவர்களது ஆட்சியில்தான் இதுபோன்ற அவலங்கள் நடக்கிறது. எனவே இந்த அரசு மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. பட்டியலின மக்களும் இந்த அரசு மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
2026 தேர்தல் கூட்டணி என்பது அடுத்தாண்டு பொதுக்குழு நடக்க உள்ளது. அப்போதுதான் எங்களது முடிவை அறிவிப்போம். விஜய் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். எம்ஜிஆர் விரைவில் ஆட்சிக்கு வந்தவர் . அவரைப்போல வருவதற்கு முதலில் இயற்கை பேரிடரின்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். மக்களின் மதிப்பை பெற்றால் அவர்களும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.
அமராவதி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால் ஆறு மாசடைந்து நீரும் விஷமாக மாறி வருகிறது. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அம்பேத்கருக்குமாவட்ட தலைநகரங்களில் அரசு செலவில் சிலை அமைக்க வேண்டும்” இவ்வாறு பூவை. ஜெகன் மூர்த்தி பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் வழக்கறிஞர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மக்களவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் திரளாக பங்கேற்றனர்