வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல்

சென்னை: வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து சென்னை குன்றத்தூர் பகுதியில் வாட்ஸ்-அப் குழு அமைத்து சமீபத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதேபோல, ஒரு வீட்டில் பிரசவமும் நடந்தது. இதில், தாய், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதை பின்பற்றி, புதுக்கோட்டையில் அபிராமி என்பவருக்கு மாமியாரும், கணவரும் சேர்ந்து ‘யூ-டியூப்’ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுபோல, சமூக வலைதளங்களை பார்த்து வீட்டிலேயே சிகிச்சை பெறுவது, பிரசவம் பார்ப்பது ஆகியவை அதிகரித்து வருகிறது. இது ஆபத்தில் முடியும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

பிரசவகால உயிரிழப்பை குறைக்க. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவங்கள் நடைபெறுகின்றன.

எனவே, வீட்டிலேயே பிரசவம் பார்க்க நினைப்பவர்கள், அதில் இருந்து மாற வேண்டும். இயற்கை பிரசவத்துக்கும், வீட்டு பிரசவத்துக்கும் வேறுபாடு உள்ளது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வீடுகளில் பிரசவம் பார்க்கும்போது, திடீரென ஏற்படும் சிக்கலான நிலையை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தாய், குழந்தை அல்லது இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

எவ்வித பிரச்சினையும் இல்லாத கர்ப்பிணிகளுக்குகூட திடீரென சிக்கல் வரலாம். முக்கியமாக, பிரசவத்தின்போது தாய்க்கு அதிக ரத்தப்போக்கு, நோய் தொற்று, குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

மருத்துவமனைகளில் இதுபோல திடீரென ஆபத்து ஏற்படும் சூழல் உருவானால், இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். ஆனால், வீட்டில் அவ்வாறு அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.