விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்திபெற்ற ஆண்டாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புவாய்ந்த இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வி.ஐ.பி.க்கள் என பலரும் வந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்தநிலையில், ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று அரங்கேறியது. இதற்கான ஏற்பாடுகள் தனியார் நிறுவனம் மூலம் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜ்ய சபா உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார்.
அப்போது அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இளையராஜா எம்.பி. ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் கருவறைக்குள் இளையராஜா எம்.பி.நுழைய முயன்றபோது, ஜீயரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆகம விதிமுறைகள் மீறி இளையராஜா எம்.பி.க்கு வெண்குடை வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி செய்தி பரவிய நிலையில், கோயிலுக்குள் நடந்தது என்ன? என்பதை அறிய செயல் அலுவலர் சர்க்கரையம்மாளை தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது அவர் பேசுகையில், “கோயில் ஆடிப்பூர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இளையராஜா எம்.பி.வந்திருந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் கோயிலுக்கு வி.ஐ.பி.க்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிப்பது வழக்கமானதுதான். நேற்று, இளையராஜா எம்.பி. உடன் ஹைதராபாத்தை சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஜீயர் வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயரும் அங்கிருந்தார்.
எனவே, ஜீயர்களுக்காக ஹைதராபாத்தில் இருந்து சின்ன ஜீயர் கொண்டுவந்த வெண்குடைதான் நேற்று பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் கோயில் நிர்வாகம் தரப்பில் இளையராஜா எம்.பி.க்காக வெண்குடை பயன்படுத்தப்பட்டது எனக் கூறுவது தவறானது. அதுபோல், அர்த்த மண்டபத்தை கடந்து கோயில் கருவறைக்குள் நுழைவதற்கு ஆகம விதிப்படி பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
இந்தநிலையில், இளையராஜாஎம்.பி.யும், ஹைதராபாத்தை சேர்ந்த சின்ன ஜீயரும் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஜீயர்கள் இருவரும், இளையராஜா எம்.பி.யிடம் பேசிக்கொண்டே சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் நடந்து வந்தனர். அப்போது அர்த்த மண்டபத்தை கடந்து, கோயில் கருவறைக்குள் நுழைவதற்கான படிக்கட்டுகளில் இளையராஜா எம்.பி.ஏறி இறங்கும் நிலையில் அவரிடம், ஆகம விதிமுறைகளை ஜீயர்கள் எடுத்துக்கூறியதையடுத்து இளையராஜா எம்.பி.படிகட்டுகளோடு நின்று கொண்டார்.
அங்கிருந்தபடியே ஆண்டாள் – ரங்கமன்னார் ஆகியோரை தரிசனம் செய்தார். இது எதார்த்தமான நிகழ்வு. இதை சில ஊடகங்கள் தவறாக திரித்து செய்தி வெளியிட்டுள்ளன. உண்மையில், இளையராஜா எம்.பி.யை அவமானப்படுவத்துவதாக ஏதாவது நடந்திருந்தால், சாமி தரிசனத்துக்கு பின்பான நிகழ்ச்சியில் கூட அவரால் சகஜமாக இருந்திருக்க முடியாது. ஆகவே, கோயில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார் எனக் கூறுவது வருத்தமளிக்கிறது” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…