சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் 18 வயது வீரரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் பலப்பரீட்சை நடத்தினார்.
இருவரும் தலா ஆறரை புள்ளிகள் பெற்ற நிலையில் 14 -வது சுற்றுப்போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது. குகேஷ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது. இந்நிலையில் இன்று அவர் சென்னை வந்தடைந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவரது பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய குகேஷ், “இது எனக்கு மிகவும் எமோஷனலான தருணம்தான். சிறிய வயதில் இருந்தே இது எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. தற்போது விளையாடிய போட்டி கடினமாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் போட்டி முடிந்து வெற்றி பெற்ற தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதேபோல சீன வீரர் டிங் லிரனும் சிறந்த வீரர்தான். நிறைய சிறந்த வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று பேசியிருக்கிறார்.