அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் பல பகுதிகளில் மர்மமான ட்ரோன் போன்ற பொருள்கள் வானில் தோன்றி மறைவது கவனிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை இயக்குவது யாரெனத் தெரியாததால் மக்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். இந்த ட்ரோன்கள் குறித்து பல்வேறு ஆச்சர்யப்படத்தக்க யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன.
“பொது மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை” – செனட்டர்
இந்த விவகாரத்தில் அதிபர் தலையிட்டு ட்ரோன்கள் குறித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என நியூ ஜெர்ஸி மாகாணத்தின் கவர்னர் ஃபில் மர்ஃபி கேட்டுக்கொண்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர் ஆண்டி கிம், ஒரு இரவு முழுவதும் கிராமப்புற வடக்கு நியு ஜெர்ஸியில் ட்ரோன்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில் ட்ரோன்கள் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில்தான் பறக்கின்றன என்றும், ஆனாலும் வானில் பறக்கும் ஆளில்லா பொருள்கள் குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
பொதுமக்கள் பார்த்தது என்ன?
இது குறித்து எஃப்.பி.ஐ மற்றும் சில ஏஜென்சிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். அதற்காக பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் முதல் பலரும் இதுபோன்ற பொருள்களை வானில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
JUST IN:
Massive Drones were spotted flying over Foley, Alabama last night.
Here’s a photo sent to me by the woman who captured the drone flying over her house. pic.twitter.com/W65v1j16Fv
— Laura Loomer (@LauraLoomer) December 14, 2024
நியூ யார்க் நகரில் இருந்து 80 மைல் தொலைவில், நியூ ஜெர்ஸி மாகாணத்தின் ரிட்டான் ஆற்றில் முதன்முதலாக இந்த ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. சில நாள்களிலேயே மாகாணம் முழுவதும் இந்த ட்ரோன்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அதிபர் ட்ரம்ப்பின் கோல்ஃப் மைதானம் முதல் ராணுவ ஆராய்ச்சி மையம் வரை ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. கடற்கரை பகுதிகளிலும் இவற்றைப் பார்த்துள்ளனர். சில நேரங்களில் கடலோரக் காவல்படையின் படகை ட்ரோன்கள் பின் தொடர்ந்ததாக கடலோரக் காவல்படை அதிகாரி குடியரசுக் கட்சியின் அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ் ஸ்மித்திடம் தெரிவித்துள்ளார்.
வானில் தெரியும் மர்ம பொருள்கள் பற்றிய விவாதம் அமெரிக்காவில் எப்போதுமே இருந்துவருகிறது. இந்தமுறை மக்களை அச்சம் பீடித்துள்ளது. முன்னதாக ஜோ பைடன் நிர்வாகம் இந்த விஷயத்தைத் தீவிரமாக கையாளவில்லை என விமர்சிக்கப்பட்டது. இதனால் ட்ரம்ப் அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்கப்படுகிறது.
பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சொல்வதென்ன?
கடந்த சனி அன்று இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபபெற்றது. அதில், FBI, பென்டகன், FAA மற்றும் பிற ஏஜென்சிகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், வானில் பறக்கும் மர்மப் பொருள்களால் நாட்டின் பாதுகாப்புக்கோ, பொது மக்கள் பாதுகாப்புக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாது என உறுதியளித்தனர். மேலும் இது அமெரிக்காவுக்கு எதிரான வெளிநாட்டின் சதியும் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் அடிப்படை விதிகளின் கீழ் பெயர் சொல்லாமல் ஊடகங்களிடம் பேசிய FBI அதிகாரி ஒருவர், “பொதுமக்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் ஓவர்-ரியாக்ஷனாக இருக்கிறது என நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

ட்ரோன்களை சுட்டு வீழ்த்த கோரிக்கை
இந்த ட்ரோன்கள் பறப்பதைக் கட்டுப்படுத்த, பென்டகன் ஒன்று அல்லது சில ட்ரோன்களை வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் இவற்றை இயக்குவது யார் என அறியலாம் என பரிந்துரைக்கின்றனர். இந்த ட்ரோன்களை கடலில் அல்லது ஆளில்லாத தரையில் விழச்செய்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர் குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.
ஃபெடரல் வான் வழித்தட நிர்வாகம் கண்காணிப்பை அதிகரிக்கக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ட்ரோன்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாகாண அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் வெள்ளை மாளிகை, தங்களுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வானில் தெரியும் பல பொருள்கள் மனிதர்கள் சட்டப்படி உரிமம் பெற்று பறக்கும் விமானங்கள்தான் எனக் கூறியுள்ளது.
UAP [Drone] in New Jersey this evening – December 15, 2024
( #OVNI #UAP #UFO #UAPx #UFOx #UAPTwitter #UFOTwitter #OEAV #OSNI #PAN #UFOSightings #Science #uso #USOs #不明飛行物 #ユーフォー #Vimana #UAPFlap2024 ) pic.twitter.com/In37cSK8CL
— Tio Red Octopus W. κρυπτός Φ (@Gandalf_ElPulpo) December 16, 2024
Drone -களை எப்படி நம்புவது?
நியு ஜெர்ஸி மாகாண உறுப்பினர் டான் பேண்டசியா, வானில் காணப்படும் ட்ரோன்கள் 1.8 மீட்டர் நீளமிருப்பதாகவும், அவை பொதுவாக ட்ரோன் ஆர்வலர்கள் இயக்கும் ட்ரோன்களை ஒத்தவை அல்ல என்றும்… டான் ஃபெடரல் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி டிபார்ட்மெண்ட் அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார். மேலும் அந்த ட்ரோன்கள் இரவில் விளக்குகள் இல்லாமல் பறப்பதாகவும், ரேடியோ மற்றும் ஹெலிகாப்டர் போன்ற கண்டறியும் கருவிகளை விலக்கி பறப்பதாகவும் கூறியுள்ளார்.
அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இது வெளிநாட்டு சதி என்றும் நம்பப்படுகிறது. ரஷ்யா, சீனா, இரான் அல்லது வட கொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை பரிசோதிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்கின்றனர். பென்டகன் உள்ளிட்ட ஏஜென்சிகள் அதற்கு சாத்தியங்கள் இல்லை எனத் தெரிவிக்கின்றன.
நியு ஜெர்ஸியில் ட்ரோன்கள் அதிகமாக தோன்றி மறையும் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண்மணி ற்றிஷா பூஷே, ட்ரோன்கள் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என சொல்வதை நம்ப மறுக்கிறார். “அது என்ன என்றும், யாரால் இயக்கப்படுகிறது என்றும் அறியாமல் நீங்கள் எப்படி அதை பாதுகாப்பானது எனக் கூறுவீர்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
Trump சொல்வதென்ன?
இந்த விவகாரம் குறித்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வருங்கால அதிபர் (ஜனவரியில் பதவியேற்கிறார்) ட்ரம்ப், அரசுக்கு இந்த விவகாரத்தில் பொது மக்களை விட அதிக தகவல்கள் தெரியும் எனக் கூறியுள்ளார். மேலும் அரசு உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அல்லது அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்துங்கள் என வலியுறுத்துகிறார்.

இதே கருத்தை கன்னடிகட்டைச் சேர்ந்த செனட்டரும் கூறியுள்ளார். “அவை விமான நிலையங்கள் அல்லது ராணுவ தளவாடங்கள் அருகில் பறந்தால் அவற்றை சுட்டு வீழ்த்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆனால், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வானில் பறப்பவற்றை சுட்டு வீழ்த்துவது சரியான நடவடிக்கை அல்ல என்றே நினைக்கின்றனர்.
நியு யார்க்கில் ட்ரோன்களை பறக்க விடும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் நியூ ஜெர்ஸியில் பொழுதுபோக்குக்காகவும், வணிக காரியங்களுக்காகவும் வானில் ட்ரோன்களை பறக்க விடுவது சட்டப்பூர்வமானது. ஆனால் அது உள்ளூர் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாக விதிமுறைகள் மற்றும் விமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ட்ரோன் ஆப்பரேட்டர்கள் FAA சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
விர்ஜினா மாகாணம் மற்றும் சில இடங்களிலும் ட்ரோன்கள் பறப்பதை மக்கள் பார்த்துள்ளனர். அவை வழக்கமான ட்ரோன்களில் இருந்து மாறுபட்டவையாகவும், ராணுவத் தளவாடத்தை நோக்கிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் 10,15 ட்ரோன்கள் வானில் பறந்ததை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பார்த்ததாக காவல்துறையில் கூறியுள்ளார் ஒரு குடியிருப்பு வாசி. அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களிலும் ட்ரோன்கள் பறக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்க தீவிர நடவடிக்கை எடுக்குமா அமெரிக்க அரசு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு சீன உளவு பலூன் பறந்தது, ஏலியன்கள் குறித்த அச்சம், உலகம் முழுவதும் போர் எழுவதற்கான சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். வல்லரசு நாட்டில் யார் இயக்குகிறார் என்றே தெரியாத ட்ரோன்கள் நடமாட்டம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என அரசு சொல்வது, அரசு மக்களிடம் எதையாவது மறைக்கிறதா என்ற சந்தேகத்தையே எழுப்பியிருக்கிறது.