கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் கபினி நதியின் 2 கிளைகள் சங்கமிக்கும் பகுதி கூடல்கடவு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள செக் டேம் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்றிருந்தனர். அதில் இரண்டு கார்களில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியான மாதன் என்பவர் அவர்களை சமாதானம் செய்யச் சென்றுள்ளார். இதையடுத்து சுற்றுலாவுக்காக வந்திருந்த ஒரு தரப்பினர் மாதனை தாக்கியதுடன், அவரது கைகளை காரின் டோரில் சிக்க வைத்து காரை இயக்கியுள்ளனர். இதனால் மாதன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு மாதனை மீட்டனர்.
மாதனை விட்டுவிட்டு காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து மாதன் மானந்தவாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கால், விரல்கள் சாலையில் உரசியதால் பிய்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் அந்த கார் மலப்புறம் மாவட்டம் குற்றிப்புறம் முஹம்மது ரியாஸ் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சுற்றுலா வந்த இடத்தில் இரண்டு கார்களில் வந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மாதன் அவர்களை தடுக்கச் சென்றுள்ளார். ஒரு காரில் வந்த 4 பேர் சேர்ந்து மாதனை தாக்கி காரில் வைத்து இழுத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்துவிடுவோம்” என்றனர்.