பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால், நேற்றிரவு காலமானார். அவர் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனிடையே ஜாகிர் உசேன் 1997 -ல் விகடனுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அந்த நேர்காணல் இங்கே
சந்திப்பு: ம.செந்தில்குமார்; புகைப்படங்கள்: கே.ராஜசேகரன்
ஜாகிர் உசேன் தபேலாவுக்காக நாம் காத்திருந்தோம் . சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர்ந்து , சக்கரம் பொருத்தப்பட்ட . . தன் தபேலா பெட்டியைத் தானே உருட்டிக்கொண்டு மேடையேறுகிறார் உசேன். இந்தியப் பெண்களிடம் ‘ பிடிச்ச ஆண் யார்… ? ‘ என்று ஒரு முக்கியமான சர்வே நடத்தியபோது , முதலிடத்தைப் பிடித்த ஜென்டில்மேன்! மழை கழுவிய ரோஜா மாதிரி நிறம் .
எல்லா இசைக்கருவிகளோடும் அவரால் தன் தபேலா மொழியால் பேசமுடிகிறது. கச்சேரி முடிந்ததும் ஆட்டோகிராஃப் வேட்டைக்கு ஈடுகொடுத்து , கூட்டத்தில் நீந்தி காரில் ஏறுகிறார். கூடவே நாமும்… சென்னை டிராஃபிக்கில் திணறுகிறது கார் . தபேலா தாதா பேசத் தொடங்குகிறார்.
” மூணு ? நாலு ? எத்தனையாவது வயதில் நான் தபேலாவைத் தொட்டேன் என்று துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை . எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ , அப்போதெல்லாம் தபேலாவைத் தட்டிப் பார்க்க என் வீட்டில் எனக்கு சுதந்திரமிருந்தது. எனக்கு ஆறு வயதானபோது என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாவது வயதில் இசை நிகழ்ச்சிகளில் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இசைக்குடும்பத்தில் பிறக்கிற குழந்தைகளுக்கு , மற்ற குழந்தைகளுக்கு இருக்கிற மாதிரியான சூழல்கள் இல்லை .
அவர்களுக்கு விளையாட பொம்மைகளோ , கிரிக்கெட் மட்டைகளோ கிடைப்பதில்லை. எனவே , அவர்கள் எப்போதும் இசைக்கருவிகளுடனேயே விளையாட வேண்டியிருக்கிறது . ஒருவகையில் பார்த்தால் , இசை என்பதே இசைக்கருவிகளோடு விளையாடுவதுதானே. எனக்கும் இதுதான் நேர்ந்தது. நாங்கள் எப்போதும் இசை கேட்டுக்கொண்டிருந்தோம். குழந்தைப் பிராயம் முழுவதுமே இசைக்கருவிகளோடுதான் இருந்தேன் . இதைத்தவிர, நேரம் கிடைக்கும் போது ஸ்கூலுக்கும் போனேன்.
தினமும் அதிகாலை ரெண்டு மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்பிவிடுவார் . அதன்பின் ரெண்டரை மணியிலிருந்து ஐந்தரை மணிவரை அப்பாவின் மேற்பார்வையில் தபேலா பிராக்டீஸ் செய்வேன். அப்பாதான் என் ஆசான். ஐந்தரை மணிக்குப் பிறகு காலை உணவு. அப்புறம் பள்ளிக்கூடம். மாலை ஸ்கூலிலிருந்து வீடு திரும்பியதும் மறுபடியும் இசைப்பயிற்சி. அது முடிந்ததும் ஹோம்வொர்க். இரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்கி விடுவேன். என்னோட பதினோராவது வயசு வரைக்கும் இது தொடர்ந்தது.”
அநேகமாக உலகின் புகழ்பெற்ற எல்லாஇசைக் கலைஞர்களோடும் சேர்ந்து நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் . இவரோடு வாசிப்பது ரொம்பக் கஷ்டம் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள் ?
” எனக்குத் தெரிஞ்சு , எங்கப்பாவோட (அல்லாரஹ்ஹா ) தபேலா வாசிக்கறதுதான் ரொம்பக் கஷ்டம். ஏனெனில், அவரோடு வாசிக்கும்போது மிகவும் துல்லியமாகவும் சரியாகவும் அதே நேரத்தில் அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ , அப்படியே வாசிப்பு இருக்கணும். இதில் அவர் ரொம்பக் கண்டிப்பா இருப்பார்.
கச்சேரி , திரைப்பட இசையமைப்பு இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள் ?
“ஒரு படத்துக்கு இசையமைப்பது என்று சில மாதங்கள் முன்பே முடிவு செய்துகொள்கிறேன். பிறகு அதற்குத் தகுந்த மாதிரி கச்சேரி , சினிமா வொர்க் என அட்ஜஸ்ட் செய்துகொள்கிறேன். “
சினிமாவுக்கா இசையமைக்க உங்களை முதலில் அணுகியது யார் ?
“1970 -ல் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. என்னோட முதல் வாய்ப்பு , ஒரு படத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் இசையமைத்ததுதான். ‘ காட்ஃபாதர் ‘ படத்தின் டைரக்டர் பிரான்சிஸ் ஃபோர்ட கப்போலா ” அபோகலிப்ஸ் நவ் என்று ஒரு படம் எடுத்தார். இந்தப் படத்தின் பிரதியை நிறைய இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்து , இசையமைக்கச் சொல்லிக் கேட்டிருந்தார் . எனக்கும் படத்தை அனுப்பியிருந்தார் . நான் அதற்காக கம்போஸ் செய்த இசை , அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது . படத்தின் க்ளைமாக்ஸில் என் இசையை அவர் பயன்படுத்திக் கொண்டார் . அந்தப் படத்தில் , ஹீரோ மார்லன் ஃபிராண்டோ இறந்துபோவது மாதிரியான இறுதிக்காட்சிகளில் பின்னணி இசை முழுவதும் என்னுடையதுதான். அதற்குப் பிறகு நிறைய படங்களுக்கும் டெலிவிஷன் சீரியல்களுக்கும் மியூஸிக் டைரக்டரா இருந்திருக்கேன்.
நான் இசையமைத்த முதல் இந்தியப் படம் Heat and Dust . இந்தப் படத்தில் நான் நடித்தும் இருக்கிறேன். “
உங்கள் குடும்பம் பற்றி . . .
( சந்தோஷத்தோடு ) எனக்குத் திருமணமாகிப் பத்தொன்பது வருடங்களாகிவிட்டன. மனைவி பெயர் டோனி (Toni ). அவர் நார்த் இண்டியன் கதக் நடனக் காரர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் . அவருக்கு நான் சரியான பக்கவாத்தியம் ( கொஞ்சம் சிரிப்பு ) . அமெரிக்காவில் நான் தபேலா வாசிக் , டோனி ஆடுவது உண்டு . எங்கள் அன்பின் ஞாபகமாக இரண்டு பெண் குழந்தைகள். மூத்த பெண்ணுக்கு பதினெட்டு வயதாகிறது. அவள் லாஸ் ஏஞ்சல்ஸில் ‘ தியேட்டர் ‘ பற்றி படித்துக்கொண்டிருக்கிறாள் . சின்னப் பெண்ணுக்குப் பதின்மூன்று வயது . நல்ல டான்ஸராக வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறாள் . தொடர்ந்து ஒரு வாரமோ , இரண்டு வாரமோ கச்சேரிகளை முடித்துவிட்டு பிறகு ஒரு வாரம் வீட்டில்தான் இருப்பேன் . இந்தியாவுக்கு நான் டூர் வரும்போது , அவர்களும் என்னுடன் கிளம்பி வந்துவிடுவார்கள். அமெரிக்காவில் கோடை விடுமுறை நாட்கள் முழுவதும் குடும்பத்தினரோடு தான் இருப்பேன். அந்த சமயத்தில் என் மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுப்பேன்.”
” கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று செய்திகள் வந்தன. நீங்கள் தான் அந்தப் படத்துக்கு இசையமைக்கிறீர்களா ? “
” மருதநாயகம் ரொம்ப இன்ட்ரஸ்டிங் ப்ராஜக்ட் உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான், கமல் மிகச் சிறந்த கலைஞர். இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும்கூட . அவரோட வொர்க் பண்றதை எனக்குக் கிடைக்கிற கௌரவமா நினைக்கிறேன். மருதநாயகத்துக்கு வொர்க் பண்றதைப் பத்தி நாங்க ரெண்டுபேரும் பேசிக்கொண்டிருக்கிறோம் . அந்தப் படத்தில் வொர்க் பண்ண எனக்கு நேரம் கிடைக்குமா என்பதுதான் இப்ப உள்ள கேள்வி . நானும் அந்தப் படத்துக்கு இசையமைக்கணும்னுதான் ஆசைப்படறேன். ஆனால், எனக்கு நேரம் கிடைக்காத பட்சத்தில்… இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றார்.