1998 கோவை குண்டு வெடிப்பு சம்பத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் பாஷா சிறையில் இருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி தனியரசு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது சீமான் கூறுகையில், “கோவை சிறையில் இருந்த போது பாஷாவிடம் மனம் விட்டு பேசியிருக்கிறேன். இது ஒரு பெரிய துயரம். இஸ்லாமிய கைதிகள் விடுதலை என பேசியவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு போராட்டங்களை தவிர வழியில்லை. மீதி இருக்கும் சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்.
25 ஆண்டுகளைக் கடந்தும் இவர்களை சிறையில் வைத்து சித்திரவதை செய்வது சரியல்ல. சட்டத்தின் படி இல்லாமல் மானுட பற்றின் படி விடுவிக்க வேண்டும். பாஜகவுக்கு ஒரே கொள்கை இஸ்லாமியர்களை வெறுப்பது. ஆளுநர் இவர்கள் விடுதலைக்கு கையெழுத்திட மாட்டார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இவர்களை விடுதலை செய்யலாமே.” என்றார்.
பாஷாவின் உடல் உக்கடம் பகுதியில் இருந்து பூமார்க்கெட் மசூதி வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி பாதுகாப்புப் பணிக்காக சுமார் 2,500 போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இறக்கப்பட்டிருந்தனர். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
அப்போது பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பயங்கரவாதி அல் உம்மா தலைவர் பாஷா குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர். பயங்கரவாதிகள், சீமான் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் மற்றும் என்ஐஏவால் தேடப்படக்கூடிய தலைமறைவாக இருப்பவர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள்.
இதற்கு திமுக அரசு துணையாக இருக்கிறது. அவருடைய சுன்னத் ஜமாத் ஆத்துப்பாலத்தில் இருக்கிறது. ஆனால் 5 கிமீ ஊர்வலம் வந்து திப்பு சுல்தான் ஜமாத்தில் அடக்கம் செய்கின்றனர். இதன் மூலம் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அவர்கள் நோக்கம்.
இதற்கு காவல் துறை உறுதுணையாக உள்ளது. இதைக் கண்டித்து கோவையில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளும் வரும் வெள்ளிகிழமை கருப்பு தினம் , துக்க தினம் அனுசரிக்கப்படும்.” என்றார்.