உலகமே திரும்பி பார்க்க சாதனை படைத்துள்ளார் குகேஷ் – உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை,

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன் இந்த பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதனை தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நேற்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து வெற்றிக்கோப்பையை முதல்-அமைச்சரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார் குகேஷ். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதல்-அமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார்.இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

.விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது ,

புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன், சென்னை பையன் குகேஷ். 18 வயதில் உலக சாம்பியனான குகேஷை உலகமே பாராட்டி வருகிறது. நம்ம குகேஷை நானும் பாராட்டுகிறேன். திறமையாலும், உழைப்பாலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் குகேஷ். இதற்கெல்லாம் குகேஷ் எடுத்துக் கொண்டது 11ஆண்டுகள்தான். குகேஷின் விடாமுயற்சியை தமிழக இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும். உலகில் உள்ள செஸ் சாம்பியன்ஸ் 85 பேரில் 31 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் திமுக அரசு எப்போதும் போற்றி பாராட்டி வந்துள்ளது. இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு துணை முதல்-அமைச்சர் செயல்படுகிறார்.

கல்வி, விளையாட்டு இரண்டிலும் தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும். பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். செஸ் விளையாட்டை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்படும். மேலும் நிறைய கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக இந்த அகாடமி உதவியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.