ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
“அபத்தமாகப் பேசியிருக்கிறார் பவன். மணிப்பூர் குறித்துப் பேச காங்கிரஸுக்குத் துளியளவும் அருகதை இல்லை. ஏனெனில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் வெளிநாட்டுப் போராளிகள் சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறுவது சட்டபூர்வமாக்கப்பட்டது. இதனால், வெளிநாட்டிலிருந்த பலரும் மணிப்பூருக்கு வந்தனர். அந்த வகையில், மணிப்பூர் கலவரத்துக்கு காங்கிரஸ் அரசு மட்டுமே காரணம். எல்லாவற்றையும் செய்துவிட்டு, இப்போது பா.ஜ.க அரசைக் குறைசொல்லி, கேவலமாக அரசியல் செய்கிறது காங்கிரஸ். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மக்களின் வாழ்க்கை நிலை மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு இனக்குழுக்களுக்கிடையே ஒரு பெரும் கலவரம் வெடித்தது. அந்த வன்முறை தொடங்கிய சமயத்திலேயே உள்துறை அமைச்சர் நேரடியாக அங்கு சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தினார். ‘குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’ என்று பிரதமரும் வாக்கு கொடுத்திருக்கிறார். `இந்தியா’ கூட்டணியில், தலைமை பிரச்னை வெடித்திருக்கிறது. ராகுலை நிராகரித்து, மம்தாவை நோக்கிச் செல்கிறார்கள். இதைத் திசைமாற்ற, காங்கிரஸ்காரர்கள் மீண்டும் மணிப்பூர் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்!”
இனியன் ராபர்ட், மாநிலச் செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 20 மாதங்களாகக் கலவரத்தில் மணிப்பூர் பற்றி எரிகிறது. மகாத்மா படுகொலைசெய்யப்பட்ட சமயத்தில், அன்றைய பிரதமரான நேரு உடனடியாக ரேடியோவில் இந்திய மக்களிடம் பேசினார். அதனால்தான் அந்த சமயத்தில் மிகப்பெரிய ரத்தக் கலவரம் தவிர்க்கப்பட்டது. ஒரு நாட்டின் பிரதமர் என்பவர், அப்படிப் பொறுப்புடன் செயல்படவேண்டும். ஆனால், மணிப்பூர் கலவரத்தை நிறுத்த விரும்பாத பா.ஜ.க-வினர், ‘இந்தப் பிரச்னை, பல நூற்றாண்டுக்காலமாக இருந்துவருவது’ என்று சமாளிக்கிறார்கள். காரணம் எதுவாகவும் இருக்கட்டும், அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால், மாநில அரசும் செய்யவில்லை. மத்திய அரசு தலையிட்டும்கூட கலவரம் ஓயவில்லை. இன்னும் சொல்லப்போனால், உள்துறை அமைச்சர் மணிப்பூருக்குச் சென்ற பிறகுதான் அங்கு கலவரம் அதிகரித்தது. இது போன்ற சூழலில், பிரதமர் நேரடியாக அங்கு சென்று, இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர் களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, அங்கிருக்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்கு ஆதரவு தரும்விதமாக, பா.ஜ.க அரசின் விருப்பத்தின் பேரில்தான் கலவரம் நடக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது!”