ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு .

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தின் தேசிய ரீதியான 56 வது நிலையமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது நிலையம் இன்று (16) ஓட்டமாவடி பொது நூலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையம் எனும் பெயரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்கவின் இணைப்பதிகாரி உமர் ஹத்தாப் அப்துல்லாஹ் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி சிந்தக்க பத்திரண ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக பிரதேச இளைஞர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

இதன்போது, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அக்கீல், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எம். ஷிஹாப்தீன், மாகாண, மாவட்ட இளைஞர் சேவைகள் மறத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், இளைஞர்களை முன்னேற்றுவதற்கான இவ்வேலைத்திட்டத்தினை சமூகத்தின் தேவை எனக் கருதி பிரதேசத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஏ.ஹனீபா இந்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக மன்றத்தின் பணிப்பாளர் சிந்தக்க ஹேவா பத்திரணவினால் நியமிக்கப்பட்டார்.

இங்கு கொரியன், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிப் பயிற்சி நெறிகள், தகவல் தொடர்பாடல், அழகுக் கலை, நெசவுக் கைத்தொழில், மனித வள முகாமைத்துவ ஆகிய பயிற்சி நெறிகள் குறித்த நிலையத்தினால் கோறளைப்பற்றுப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்காக நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.