கிராம ஊராட்சிகளில் கட்டிடம், மனை பிரிவுகளுக்கு அனுமதிக்கான கட்டணம் நிர்ணயம்

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி, உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி பெறுவதற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்.2-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின், இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் 2,500 சதுரடி மனையில் 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் உடனடியாக கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது, கட்டிட அனுமதிக்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.27, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.25, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.22, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இக்கட்டணத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை. அதன்பின், கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் சுயசான்று அடிப்படையிலான அனுமதியளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஊரகவளர்ச்சித் துறை இயக்குநரின் பரிந்துரைத்த கட்டணத்தை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்பு கட்டிடத்தை பொறுத்தவரை, ஏற்கெனவே உள்ள வகைப்பாடு அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கட்டிடங்களை பொறுத்தவரை சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.32, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.30, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.26, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை, கல்வி நிறுவனம், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்களை பொறுத்தவரை சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.43, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.40, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.35, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே மனைப்பிரிவை பொறுத்தவரை, குடியிருப்பு மனைப்பிரிவாக இருந்தால், ஒரு மனைக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000 மற்றும், சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.4-5 , இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.3- 4, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.2-3 , இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.1-2 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தொழிற்சாலைக்கான மனையாக இருந்தால் ஒரு மனைக்கு ரூ.10 ஆயிரம் அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும். சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.6- 7, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.4.50- 6 , சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.3- 4.50, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.1.30 முதல் 3 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகங்கள், தீர்மானம் மூலம், இந்த கட்டணங்களுக்குள் தங்கள் ஊராட்சிகளில் கட்டணம் நிர்ணயிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.