திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே அமைந்திருக்கிறது 12 வார்டுகளை கொண்ட சோழவரம் முதல்நிலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் செங்குன்றம் – காரனோடை சாலைக்கு அருகே சோழவரத்தில் அமைந்திருக்கிறது அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம்.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவோடு கூடிய உடற்பயிற்சி கூடத்தை அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 15, 2019 ஆம் ஆண்டு திறந்து திறந்துவைத்துள்ளார். ஆனால், இந்த பூங்கா கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உரிய பராமரிப்பு இல்லாமல் பூட்டப்பட்டிருக்கிறது. மேலும், உடற்பயிற்சி கூடமும் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் மிகவும் தூசி படர்ந்து பாழடைந்து காணப்படுகிறது.
உடற்பயிற்சி கூடக் கருவிகள் அனைத்தும் சேதமடைந்து, அதன்மீது அதிகளவில் தூசி படர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் உடற்பயிற்சி கூட உட்புற சுற்றுச்சுவரும் சேதமடைந்து கீழே விழுகிற நிலையில் இருக்கிறது மற்றும் பூங்காவிற்குள் மழை நீரும் தேங்கியிருக்கிறது.
இது தொடர்பாக அந்த பகுதி இளைஞர்கள் கூறுகையில், “இந்த ஏரியாவில இருக்கிற ஒரே பூங்கா இதுதான். இங்க இருக்கிற சின்ன குழந்தைங்க உள்பட எல்லாருக்குமே இந்த பூங்கா தான் ஒரு பொழுதுப் போக்குற இடமா இருந்துச்சு. காசு கொடுத்து போகக் கூட பக்கத்துல எங்கையும் ஜிம் கிடையாது. அதனால, இங்க இருக்கிற பையைங்களுக்கு நம்ம ஏரியால உடற்பயிற்சி கூடம் திறக்குறாங்கனு சந்தோசமா இருந்துச்சு. ஆனா திறந்த கொஞ்ச நாளுக்கு அப்புறம், உடற்பயிற்சி கூடத்தை திறக்காம இப்ப வரைக்கும் பூட்டியேதான் வச்சுருக்காங்க.
இதனால இங்க இருக்கிற பையங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, இதனால உடற்பயிற்சி கூடத்தை சரி பண்ணி பயன்பாட்டுக்கு கொண்டு வரணும்.
பூங்கா மாலையில 4 – 8 மணி வரைக்கும் திறந்திருக்கும். ஆனா, கடைசி 5 மாசமா பூங்காவும் திறக்காம பூட்டியே தான் இருக்கு. இதனால குழந்தைங்க விளையாட இடம் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க. மேலும், இங்க இருக்கிற வயசானவங்க, பெரியவங்க வாக்கிங் போக கூட இடம் இல்லாம கஷ்டப்படுறாங்க. எனவே, வருங்காலத்தில பூங்காவில் மழை நீர் ரொம்ப நாள் தேங்காத மாறி ரெடி பண்ணி, மறுபடியும் பூங்காவை திறக்கணும்” என்றனர்.
இது குறித்து சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணனை தொடர்புக் கொண்டோம். வழக்கம்போல் அவரின் கணவரே நம்முடைய அழைப்பை ஏற்று பேசினார். அவரிடம் பூங்கா திறக்கப்படாதது குறித்து கேட்டப்போது, “மழை பெய்தால் பூங்காவில் தண்ணீர் முட்டி வரைக்கும் தேங்குவதால் கடந்த 2 மாதமாக பூட்டி வைத்திருப்பதாகவும், மழைக் காலம் முடிந்தவுடன் பூங்காவை சரி செய்து திறப்பதாகவும் தெரிவித்தார்.
உடற்பயிற்சி கூடம் குறித்து கேட்டப்போது, நாங்க பதவிக்கு வந்ததில் இருந்தே பூட்டியே தான் இருப்பதாகவும், ஆட்கள் யாரும் வராததால் பூட்டி வைத்திருப்பதாகவும்” தெரிவித்தார்.