ஜார்ஜியாவில் பலியான அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் – உடல்களை கொண்டு வர காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

அமிர்தசரஸ்,

ஜார்ஜியா நாட்டின் குதவுரி நகரில் மலை பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்திய உணவு விடுதியான இதன் 2-வது தளத்தில் உயிரிழந்தவர்களின் சில உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி அந்நாட்டின் பிளிசி நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், உயிரிழந்தவர்களில் 11 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவித்து இருந்தது. ஜார்ஜியாவின் உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தொடக்க விசாரணையில் அவர்களின் உடல்களில் காயங்களோ அல்லது வன்முறை நடந்ததற்கான அடையாளங்களோ காணப்படவில்லை.

அவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷ பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்ததுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமிர்தசரஸ் தொகுதிக்கான எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா இன்று கூறும்போது, ஜார்ஜியாவில் உள்ள உணவு விடுதியில் பலியாகி கிடந்த 12 பேரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.

அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் இந்தியர்கள் அல்லாதோருக்கான விவகாரங்கள் துறை மந்திரியான ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் சிங் ஆகியோரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.