புதுடெல்லி: இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோக்கு ஐயூஎம்எல் எம்பி கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.யான கே.நவாஸ்கனி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது: இலங்கை அதிபர் திசாநாயக்க நம்முடைய நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருப்பதை அறிந்தேன். அவரிடம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்தும் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களுக்கு நேரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது என தொடர்கிறது. எனவே, இதற்கான நிரந்தர தீர்வை உடனடியாக காண வேண்டும்.
இலங்கை அதிபர் நம்முடைய நாட்டுக்கு வருகை தந்திருக்கும் இத்தகைய தருணத்தில் அவரிடம் வலியுறுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் நட்பு நாடு என்ற அடிப்படையில் பல்வேறு உதவிகளை இந்தியா முன்வந்து செய்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசிடம் தமிழ்நாடு மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நிரந்தர தீர்வை காணும் வகையில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கிட வேண்டும். சுமுகமான முடிவு எட்டப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.