பரிசோதனையில் முன்னேற்றம்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண் நன்றாக இருக்கிறார்

நியூயார்க்:

மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளித்து மனித உயிர்களை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை இதற்கு பயன்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில், அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக டாக்டர்கள் கடந்த மாத இறுதியில் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக செய்தனர். ஆபரேசனுக்கு பிறகு லூனியின் உடல்நிலை தேறிய நிலையில் 11 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் தற்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்கிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு லூனி வேகமாக குணமடைந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், அருகிலுள்ள குடியிருப்பில் தங்கியிருந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு ஓய்வெடுக்கிறார். இருப்பினும் சில பரிசோதனைகளுக்காக இந்த வாரம் தற்காலிகமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னும் மூன்று மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம், அவரக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் செயலிழந்தால், அவர் மீண்டும் டயாலிசிஸ் செய்ய ஆரம்பிக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.

சிறுநீரகம் செயலிழந்ததால் 8 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து அவஸ்தைப்பட்டு வந்த லூனி இப்போது தனது வாழ்வில் புதிய ஆரம்பம் போன்றது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்பை பெற்றுள்ள ஐந்தாவது அமெரிக்கர் லூனி. இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் அல்லது இதயம் பொருத்தப்பட்ட 4 பேரும் இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்தனர். ஆனால், அவர்களைப் போன்று அல்லாமல் லூனியின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை என்பதால், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான முறையான ஆய்வுகளை விஞ்ஞானிகள் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு, லூனியின் அறுவை சிகிச்சை முக்கிய படியாக அமைந்துள்ளதாக நியூயார்க் பல்கலைக்கழக டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமெரி தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.