பழனிசாமியை தூக்கத்திலிருந்து எழச் சொல்லுங்கள்: அமைச்சர் டிஆர்பி ராஜா

மதுரை: “2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கனவு காண்கிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

மதுரை ஐராவதநல்லூரில் இன்று (டிச.17) மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி, கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொறுப்பாளர் பிரபு வரவேற்றார்.

இதில் திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக முதல்வர், துணை முதல்வரின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை. கட்சிக்கு புதிதாக இணையும் இளைஞர்களுக்கு கட்சியின் கொள்கையை கொண்டு சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

திமுக தகவல்தொழில்நுட்ப அணியினர் அவதூறு பரப்புவதாக கூறுவது முற்றிலும் தவறானது. 2026-ல் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுகிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள். 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் துவங்கி விட்டோம். தமிழக முதல்வர் 200 தொகுதியில் வெற்றி இலக்கு என அறிவித்துள்ளார்.

ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் முன்னெடுப்புகளை தகவல் தொழில்நுட்ப அணி செய்துவருகிறோம். 2026 தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பிற்போக்குத்தனமான பாஜகவின் எண்ண ஓட்டங்களை தகர்த்தெறியும் அளவுக்கு தமிழக முதல்வர், இந்தியாவில் முதல் ஆளாக களமிறங்கி எதிர்த்து துணிச்சலோடு நின்று கொண்டிருக்கிறார்.

பாஜகவின் இத்திட்டத்தை திமுக முழுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியாவின் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் தேசிய தலைவராக உருவெடுத்து இந்தியாவின் வளர்ச்சியை பற்றி சிந்தித்து வருகிறார். மதுரையில் தனித்துவமிக்க பிரம்மாண்ட டைட்டல் பார்க் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

தென்னிந்திய அளவில் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிப்காட் தொழில் பூங்கா மதுரைக்கு அருகில் அமையவுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் தமிழகத்தில் ஏதுவான சூழல் தற்போது நிலவி வருகிறது. மகத்தான தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிக அளவில் ஏற்படவுள்ளது. இதன் மூலம் தமிழக முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலர் வர்த்தகம் கனவு நிச்சயம் நிறைவேறும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.