புதுடெல்லி: டெல்லியின் ஆம் ஆத்மி முதல்வரான அதிஷி மர்லேனா தனது கால்காஜி தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். இங்கு பழம்பெரும் காளிகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.
டெல்லியில் கடந்த 2020 சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி, கால்காஜி தொகுதியில் முதல் முறை யாக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் தரம்பீர் சிங்கை தோல்வியுறச் செய்தார். அப்போது அவர் 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், கால்காஜி தொகுதியில் அதிஷி மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த 2019-ல் கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளராக அதிஷி நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 4.77 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவருக்கு 3-ம் இடமே கிடைத்தது.
இதையடுத்து 2-வது முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு கால்காஜி தொகுதி எம்எல்ஏ ஆனார். மதுபான ஊழல் வழக்கில் கேஜ்ரிவால் சிறை சென்றதால், அவருக்கு பதில், கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அதிஷி முதல்வரானார். முதல்வர் அதிஷி தனது தொகுதியிலுள்ள பழம்பெரும் கால்காஜி காளிகாம்பாள் கோயிலுக்கு செல்வம் வழக்கம். இந்த தொகுதி மக்கள் கால்காஜி கோயிலை அதிகம் மதிக்கின்றனர். இக்கோயிலில் கால்காஜி மாதா எழுந்தருளியதாக நம்பிக்கை உள்ளது. இந்த கோயில் கடந்த 1764-ல் மராத்தா மன்னர்களால் கட்டப்பட்டது. பிறகு 1816-ல் முகலாய மன்னர் அக்பரது ஆட்சியில் கால்காஜி கோயிலை சுற்றி தங்கும் மடங்கள் கட்டப்பட்டன. பஹாய் சமூகத்தினரின் பிரபல சுற்றுலா தலமான லோட்டஸ் கோயிலும் கால்காஜியில் அமைந்துள்ளது.
இத்துடன், டெல்லியின் முதல்வரான மறுநாள், கன்னாட்பிளேஸில் உள்ள பிரபல ஹனுமன் கோயிலுக்கும் அதிஷி சென்றிருந்தார். இதுபோல், தம்மை ஒரு பக்தையாக முன்னிறுத்திக் கொள்ளும் அதிஷி, கால்காஜி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.