“பாஜகவின் சதி, தந்திரம்…” – ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு ஏன்?

புதுடெல்லி: “அரசியலமைப்பை அழிப்பதற்கான மற்றொரு சதி”, “இது, வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கிறது,” “அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத் தேர்தல்களை நடத்துவதே உள்நோக்கம்”, “நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம்” என ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

மக்களவையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டபோது பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் கூறுகையில் “எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தவிர, மக்களின் ஆணைகளைப் பறிக்கிறது என்ற கேள்வியும் இதில் உள்ளது. மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. நமது மக்கள் என்ற வார்த்தையுடன்தான் நமது அரசியலமைப்பு தொடங்குகிறது. இது இந்திய மக்களைப் பற்றியது. அவர்களை யார் ஆளவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

தன்னிச்சையான காலக்கெடுவுக்குள் ஓர் அரசு கலைக்கப்படும்போது, காரணமே இல்லாமல் இன்னொரு அரசு கலைக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். இந்த முழு மசோதாவிலும் எந்த அர்த்தமும் இல்லை. நாடாளுமன்ற நடைமுறையில் ஜனநாயகத்தை சீர்குலைக்காமல் ஒரு நிலையான விதியை செயல்படுத்த முடியாது” என்று சசி தரூர் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப் பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது” என கூறி ஆவேசமாக கூறினார்.

அக்கட்சியின் மக்களவை எம்.பி அபிஷேக் பானர்ஜி, “நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே, பாஜக இன்று அரசியலமைப்பு திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பது, ஜனநாயகத்தின் மீதான வெக்கமற்ற தாக்குதலுக்கு சற்றும் குறைவில்லாதது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, மக்களுக்கு அடிப்படை உரிமையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயலாகும். வாக்களிக்கும் உரிமை என்பது அரசாங்கத்தை பொறுப்பு கூற வைக்கும், அதிகார துஷ்பிரயோத்தை தடுக்கும் ஒரு சக்தி. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் மசோதா மட்டுமில்லை. நமது நாட்டை நிர்மானித்த தந்தையர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பட்ட ஜனநாயத்தின் மீதான நேரடியான தாக்குதல்” என்று தெரிவித்தார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தும் அரசியலமைப்பு 129-வது சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில், திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத் தலைவருமான டி. ஆர். பாலு பேசும்போது, “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதுபோல ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இம்மசோதாவை நான் ஆதரிக்க முடியாது. ஒன்றிய பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எப்படி சட்டமாக்க முடியும்?

தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வதற்காகவே வாக்காளர்கள் ஓர் அரசை தேர்தெடுக்கிறார்கள். அது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. ஒரே தேர்தல் முறை மூலமாக அவ்வுரிமையை இந்த மசோதா பறிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஒவ்வொரு முறையும் 13,981 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும். மேலும், 9,284 கோடி ரூபாய் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க மட்டுமே செலவு செய்ய வேண்டும். இது தேவையில்லாதது.

நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமில்லை என 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக் குழுவின் 79-வது அறிக்கை முடிவு செய்திருக்கிறது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மேலும், ஒன்றிய அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இந்த மசோதாவை முதலில் பரிசீலனைக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் அவையில் விவாதத்துக்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் டி.ஆர்.பாலு.

சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “இந்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல். இது தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கிறது. பாஜக அதிகாரத்தை மையப்படுத்த விரும்புகிறது. இதனால், எவ்வளவு செலவு குறையும் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இதனை எதிர்ப்போம்” என்று தெரிவித்தார். அவரது கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோசா, நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம்” என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியுடன் முரண்பாடுகள் இருந்தாலும், இந்த மசோதாவை அவர்களுடன் இணைந்து சமாஜ்வாதி கட்சியும் எதிர்க்கிறது. இது அரசியலமைப்பை அழிப்பதற்கான மற்றொரு சதி” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை இண்டியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும்.

அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத் தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும். நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பாஜக அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் இத்தகைய அடாவடி முயற்சியை மேற்கொள்கிறது” என்று சாடியுள்ளார்.

“மாநில பிரச்சினைகளையும், மத்தியில் உள்ள பிரச்சினைகளையும் நாடு முழுவதும் உள்ள இதர பிரச்சினைகளையும் ஒரு குழப்பத்தில் கொண்டு போய் நிறுத்தி, மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக் கூடிய வகையில்தான் இந்த சட்ட மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தலுக்குத்தான் வழிவகுக்கும். அடுத்தக் கட்டம் அங்குதான் போய் நிற்கும்” திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்ப நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதா ஜேபிசி எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. இக்குழு 90 நாட்களில், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். ஜேபிசி பரிசீலனைக்குப் பின், இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும். | வாசிக்க > ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.