திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிகளவில் மழைநீர் வந்து கொண்டிருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் கடந்த 12-ம் தேதி மதியம் முதல் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு ஆயிரம் கன அடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, படிபடியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 13-ம் தேதி காலை முதல் விநாடிக்கு 16,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்யாததால், நீர் வரத்து குறைந்து வந்ததால், பூண்டி ஏரியிலிருந்து கடந்த 14- ம் தேதி மாலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இச்சூழலில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வரும் நீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. ஆகவே நேற்று காலை பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 8, 500 கன அடியாக குறைத்தனர் நீர் வள ஆதாரத் துறையினர். இந்நிலையில் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அவ்வாறு குறைந்து வரும் நீர் வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2,040 கன அடியாக இருக்கிறது. ஆகவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,518 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 32.99 அடியாகவும் உள்ளது.
இதனால், இன்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு ஆயிரம் கன அடியாக நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள் குறைத்தனர். நீர் வரத்தை பொறுத்து இந்தளவு குறைக்கப்படும் அல்லது அதிகரிக்கப்படும் என, நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.