“3 தங்கம் வென்ற எம் மகளுக்கு எதுவுமே அறிவிக்காதது வருத்தம்தான்"- கேரம் சாம்பியன் காசிமாவின் அப்பா

இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ள குகேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருவதோடு, 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தியிருப்பது வரவேற்பை அள்ளிக்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி, மித்ராவும் தங்கம், வெள்ளி வென்று பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், எளிய பின்னணியைக் கொண்ட கேரம் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு, இதுவரை எந்த நிதியுதவியையும் அறிவிக்கவில்லை என சர்ச்சை ஆகியிருக்கிறது. இதுகுறித்து, காசிமா அப்பா மேஹ்பூப் பாஷாவிடமும் தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயத்திடமும் பேசினேன்.

காசிமா

“குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். எங்களோட இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்த மாதிரி விளையாட்டு வீரர்களை அரசு பாராட்டி, ஊக்கப்படுத்துறது வரவேற்கவேண்டிய விஷயம். அப்போதான், இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவாங்க. அதேநேரம், செஸ் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்துல கொஞ்சமாவது அரசு, கேரம் விளையாட்டு வீரர்களுக்கும் கொடுத்திருக்கணும். தமிழ்நாட்டிலிருந்து கேரம் உலகப்போட்டிக்கு காசிமா, மித்ரா, நாகஜோதின்னு மூணு வீராங்கனைகள் பயிற்சியாளர் மரிய இருதயம் என 4 பேர் அமெரிக்காவுக்குப் போனாங்க.

போக்குவரத்து செலவுவுக்கு தலா, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்-னு 6 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளித்து அனுப்பிவைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர்களும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை வீணடிக்காத அளவுக்கு ஜெயிச்சுட்டு வந்தாங்க. குறிப்பா, என் பொண்ணு காசிமா தனிநபர், இரட்டையர், குழு போட்டின்னு மூன்று பிரிவுகளிலும் மூன்று தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடிச்சது. போக்குவரத்துக் கட்டணத்தை அரசு கொடுத்து ஊக்கப்படுத்தியில்லைன்னா, அமெரிக்கா போறது சிரமமாகியிருக்கும். அரசு நம்பிக்கையை எங்கப் பிள்ளைங்க காப்பாத்திட்டாங்க. ஆனா, குகேஷுக்கு பரிசுத்தொகை அறிவிச்ச மாதிரி, உலகக்கோப்பையை வென்றதுக்கும் அரசு பரிசுத்தொகையை அறிவிச்சிருக்கணும். இதுவரைக்கும் அறிவிக்காததுல எங்களுக்கு வருத்தம்.

நான், ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர். அதுவும் சொந்த ஆட்டோ இல்ல, வாடகை ஆட்டோதான் ஓட்டுறேன். வீடுகூட வாடகை வீடுதான். காசிமாவுக்கு கேரம்ல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சபிறகு, அவளுக்கு கேரம் சொல்லிக்கொடுத்துக் கிட்டிருக்கேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு என்னோட சொந்த செலவுலதான் கலந்துக்க வெச்சிருக்கேன். போக்குவரத்துக்கே நிறைய செலவாகும்.

அப்பாவுடன் காசிமா

மூத்தப் பொண்ணுக்கு திருமணம் பண்ணி வெச்ச கடனே நிறைய இருக்கு. ஏற்கனவே, காசிமா கேரம் உலக கோப்பைக்கு செலக்ட் ஆனப்போ, விசாவுக்காக 40,000 ரூபாய் கடன் வாங்கித்தான் கட்டினேன். விசா சிக்கலால், அந்தப் போட்டியில கலந்துக்க முடியாம போயிடுச்சு. இப்போ, வாய்ப்பு கிடைச்சு என் பொண்ணு திறமையை உலகறிய வெச்சுடுச்சு. நான் காசிமாவுக்கு கேரம் கத்துக்கொடுக்கிறதைப் பார்த்துட்டு நிறைய பேர் பொண்ணுக்கு விளையாட்டெல்லாம் சொல்லிக்கொடுக்காதன்னு அட்வைஸ் பண்ணுவாங்க. எதையும் நான் கேட்டுக்கிட்டது கிடையாது. என் பொண்ணு விருப்பம்தான் முக்கியம். அதனால்தான், என் சக்திக்கு மீறி கடனெல்லாம் வாங்கி கேரம்ல தொடர்ந்து ஊக்கப்படுத்திட்டிருக்கேன். இன்னும் சாதிக்க வைப்பேன்.

எங்களோட கஷ்டங்களை புரிஞ்சுக்கிட்டு அரசு உதவினா, இன்னும் பெரிய அளவுக்கு என் பொண்ணு ஜெயிப்பா. எங்களை மாதிரியே கஷ்டப்படுற குடும்பத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் உருவாகி வருவாங்க. இந்த வாரம், காசிமாவை நேர்ல அழைச்சிருக்காங்க. என்ன பண்ணப்போறாங்கங்கிறது அப்போதான் தெரியும்” என்கிறார் எதிர்பார்ப்போடு.

மரிய இருதயம்

இதுகுறித்து, பயிற்சியாளர் மரிய இருதயத்திடம் பேசினேன்… “கேரம் விளையாட்டு போட்டிகளை பொறுத்தவரை, கேரம் சாம்பியன்ஷிப்தான் பெரிய போட்டி. அதற்கு அடுத்துதான் உலகக்கோப்பை. இப்போ, காசிமா ஜெயிச்சது உலகக்கோப்பை போட்டி. இந்த உலகக்கோப்பை போட்டியானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். உலக சாம்பியன்ஷிப் போட்டி 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும்.

கடைசியா 2022 ஆம் ஆண்டு மலேசியாவுல நடந்தது. அடுத்து, 2026-ல் இந்தியாவில்தான் நடக்கப்போகுது. நான் 1995-ல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றேன். அதுக்காக, எனக்கு 1 ரூபாய்க்கூட பரிசுத்தொகை அறிவிக்கல. அதுவே, விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதுக்கு தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிச்சது. விளையாட்டில் மட்டுமல்ல எதிலேயுமே பாகுபாடு பார்க்கக்கூடாது. ஒலிம்பிக்கில் கேரம் கிடையாது. அதுமட்டுமில்லாம, கடந்த 2019-லிருந்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் கேரம் விளையாட்டை அங்கீகரிக்கல. அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துக்கிட்டிருக்கோம்.

மரிய இருதயம்

விளையாட்டுத்துறை அமைச்சர்தான் எங்களுக்கு போக்குவரத்துக் கட்டணத்தை கொடுத்து ஊக்கப்படுத்தினார். உலகக்கோப்பையை வென்றபிறகு பரிசுத்தொகை எதுவும் அறிவிக்கப்படல. ஆனா, தமிழ்நாடு அரசுக்கிட்டேயிருந்து இந்த வாரம் நேரில் சந்திக்க அழைப்பு வந்திருக்கு. அப்போக்கூட பரிசு ஏதாவது அறிவிக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படி அறிவிச்சா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” என்கிறார் புன்னகையோடு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.