Doctor Vikatan: கேழ்வரகு உணவுகள் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிரிக்குமா?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு உணவு நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கேழ்வரகு எடுத்துக்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சொல்கிறார் ஒரு மருத்துவர். அது உண்மையா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

vikram

மாவுச்சத்துள்ள மற்ற உணவுகளைவிடவும் சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உணவானது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. அது கேழ்வரகு உணவுகளுக்கும் பொருந்தும். சிறுதானிய உணவுகளின் மிகச் சிறந்த பலன் இது.

கேழ்வரகு நல்லது என்றதும் பலரும் அதை கூழ் அல்லது கஞ்சி வடிவில்தான் அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். அரிசி, கோதுமை உணவுகளைவிடவும், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றவை. காரணம் அவற்றின் ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’. ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. சிறுதானிய உணவுகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் தன்மை உடையவை.

சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.

கேழ்வரகோ, பிற சிறு தானியமோ, எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதும், எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியம். சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. இந்த உணவுகளை கூழ், களி, கஞ்சி வடிவங்களில் எடுத்துக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும். அதனால் அவற்றை இட்லி, தோசை, அடை போன்ற வடிவங்களில் செய்து, அளவோடு சாப்பிடலாம். கேழ்வரகு உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் எனத் தெரிந்து எடுத்துக்கொள்ளும்போது ரத்தச் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. கேழ்வரகின் நல்ல தன்மையோடு சேர்த்து அதிலுள்ள கால்சியம் சத்தும் உடலுக்குச் சேரும் என்பதே உண்மை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.