இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை எட்டக்கூடியவர் என்று ஒருகட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற பிரித்வி ஷாவுக்கு அதே ஆண்டு அக்டோபரில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இதுவரையில் விளையாடிய 316 பேரில், 17 பேர் மட்டுமே தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்திருக்கின்றனர். அந்த எலைட் லிஸ்டில் பிரித்வி ஷாவும் ஒருவர்.
தான் அறிமுகமான டெஸ்ட் தொடரில் மட்டும் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த பிரித்வி ஷா, அடுத்தடுத்த தொடரில் சொதப்பியது, காயம், ஃபிட்னஸை இழந்தது உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த ரஞ்சி டிராபி தொடரில் மும்பை கிரிக்கெட் அசோசியேசன், பயிற்சிகளில் முறையாகப் பங்கேற்காததால் பிரித்வி ஷாவை நீக்கியது. ஐ.பி.எல் மெகா ஆக்ஷனிலும் அன்சோல்ட் ஆனார்.
தற்போது நடந்துமுடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த நிலையில், அடுத்து வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷா கழற்றிவிடப்பட்டிருக்கிறார். இதனால் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டிருக்கிறார் பிரித்வி ஷா.
அந்த ஸ்டோரியில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது ரெக்கார்டைக் குறிப்பிட்டு, “கடவுளே, நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்பதைக் கூறுங்கள். 65 இன்னிங்ஸ்களில் 126 ஸ்ட்ரைக் ரேட்டில் 55.7 சராசரியுடன் 3399 ரன்கள் எடுத்தும் போதுமானதாக இல்லையா… ஆனாலும், நான் உன் மீது நம்பிக்கை வைப்பேன். மக்கள் என்மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், நான் நிச்சயம் மீண்டு வருவேன். ஓம் சாய்ராம்.” என்று பிரித்வி ஷா பதிவிட்டிருக்கிறார்.
2018-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இந்திய அணியில் பிரித்வி ஷாவுடன் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், ரியான் பராக், அபிஷேக் சர்மா ஆகியோர் தற்போது இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…