வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை பாகம் 2’ வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது .
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உரிமைகளுக்காகப் போராடும், அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பும் போராட்டக்காரர்களின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அரசியல் கருத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லரிலேயே, ‘வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்’ மற்றும் ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களா மட்டும்தான் உருவாக்குவாங்க…அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது..’ என்ற அரசியல் வசனங்களும் கவனம் ஈர்த்திருந்தன.
இதுபோல படத்தில் அழுத்தமான அரசியல் வசனங்களும், காட்சிகளும், கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் சென்சார்டு போர்டு, ‘அரசு, அரசாங்கள், தேசிய இன விடுதலை’ உள்ளிட்ட வார்த்தைகளை மாற்றியிருக்கிறது. ‘பிரச்னையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்டக் களங்களிலிருந்து உருவாக்கிக்கணும்’ என்ற வசனம் மாற்றப்பட்டு, அதில் ‘அந்த ஆயுதம் ஓட்டாகக் கூட இருக்கலாம்’ என்று சேர்க்கப்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் தன் படங்களில் எப்போது வன்மையான வட்டார வழக்கு வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் மியூட் செய்யப்பட்டிருக்கிறது.
இதுதவிர சாதியைக் குறிக்கும் சொற்கள், அரசியல் கட்சிகளைக் குறிக்கும் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கிறது. இரத்தம், வன்முறையான காட்சிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. படம் மொத்தம் 3 மணி நேரம் (2.90 நிமிடங்கள்). இப்படம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக் கூடிய படம் என்று ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.