ரயில்வே ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையை சேர்ந்த சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்து ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற விருதை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு.
அந்த வகையில், கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி வெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பெரும் விபத்தைத் தடுத்து சுமார் 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜாபர் அலியைத் தொடர்புகொண்டு பேசினோம்.
“கடந்த ஆண்டு, டிசம்பர் 17-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 9.02-க்கு டிராக் ரொம்ப மோசமாக இருக்கிறது என்ற தகவல் வந்தது. அடுத்த 8 நிமிசத்துல, 9.10 -க்கு டிரெயின் ஸ்ரீவைகுண்டம் வந்துடுச்சு. ஆனா, நிலைமை மோசமாக இருந்ததால, மதுரையில் உள்ள கன்ட்ரோல் டீமிடம் சொல்லி உடனே டிரெயினை நிறுத்திட்டேன். நிலைமை சரியானால்தான் டிரெயினை எடுக்க அனுமதிப்பேன் என்று சொல்லிவிட்டேன். டிரெயினில் மொத்தம் 800 பயணிகள் பயணித்தனர். அதில் 200 பயணிகளை பக்கத்தில் இருக்கிற பள்ளியில் தங்க வைக்க முடிவு செய்து பேருந்து மூலம் அனுப்பி வைத்தோம்.
மீதமுள்ள 600 பயணிகளை கூட்டிச்செல்ல வாய்ப்புகள் இல்லை. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து போனதால் அந்த இடத்துக்கு பேருந்து வர முடியவில்லை. அதனால், 600 பயணிகளை அங்கிருந்து அழைத்து செல்ல முடியவில்லை. அவர்கள் டிரெயினிலேயேதான் இருந்தார்கள். அந்த ஸ்டேஷனும் பெரிய ஸ்டேஷன் கிடையாது. அங்கு டீக்கடைக் கூட இருக்காது. பயணிகளுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய முடியவில்லை. 4 பக்கமும் தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் உணவுகளை எடுத்து வர முடியவில்லை. அதனால் பயணிகள் வண்டியை எடுக்க சொல்லி எங்களிடம் சண்டை போட்டார்கள்.
அந்த இடத்தில் இருந்து 400 மீட்டரில் ஒரு ஊர் இருக்கிறது. அங்கிருந்து மக்கள் சாப்பாடு செய்து பயணிகளுக்கு எடுத்துவந்து தந்தனர். ஞாயிற்றுக் கிழமை 1 மணிக்கு வேலைக்கு வந்தேன். செவ்வாய் கிழமை 6 மணிக்குத்தான் வேலை முடிந்தது. அந்த இரண்டரை நாட்களும் ஸ்டேஷனில்தான் இருந்தேன். வண்டியை நிறுத்துவது ஸ்டேஷன் மாஸ்டரின் வேலைதான். அங்கிருந்த பயணிகளை சமாளிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது. நிலைமை சரியானால்தான் வண்டியை எடுக்க அனுமதிப்பேன் என்று சொன்னேன். அதனால்தான் அந்த 800 பயணிகளின் உயிரைக் காப்பற்ற முடிந்தது. அந்த சவாலை சரியாக கையாண்டதால்தான் இந்த விருதை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ரயில்வே துறைக்கு நன்றி” என்று பேசினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…