Ravichandran Ashwin Latest News Updates: “நான் உங்களுடன் 14 வருடங்கள் விளையாடி இருக்கிறேன். இன்று நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் என்று சொன்னபோது, அது என்னை கொஞ்சம் உணர்ச்சிவசத்திற்கு ஆளாக்கியது. நாம் ஒன்றாக விளையாடிய ஃப்ளாஷ்பேக் எனக்கு நினைவுக்கு வந்தது. உங்களுடன் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன்.
இந்திய கிரிக்கெட்டில் உங்களின் திறமை மற்றும் மேட்ச் வின்னிங் பங்களிப்புகள் எதையும் நிச்சயம் குறைத்து மதிப்பிடவே முடியாது. நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றே நினைவுகூரப்படுவீர்கள். குடும்பத்துடனும், நீங்கள் செய்ய விரும்பும் சில விஷயங்களுடனும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மிகுந்த மரியாதையையும், அன்பையும் செலுத்துகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி நண்பரே…”
விராட் கோலியின் போர் தளபதி – அஸ்வின்
இது அஸ்வினின் ஓய்வுக்கு பின்னர் சில நிமிடங்களிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி பதிவிட்டதாகும். அஸ்வின் தோனியின் தலைமையில் இந்திய அணிக்குள் வந்திருந்தாலும், விராட் கோலியின் தலைமையில்தான் உச்சம் பெற்றார் எனலாம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிக்கரமான கேப்டன் என்றால் அதில் விராட் கோலியின் பெயர்தான் முதன்மையானதாக இருக்கும். அதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க, விராட் கோலியின் கேப்டன்ஸியில் பல வேகப்பந்துவீச்சாளர்கள் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினர்.
மறுமுனையில் அஸ்வினும், ஜடேஜாவும்தான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை கவனித்துக்கொண்டனர். அதில் அஸ்வினின் பங்கு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. அஸ்வின் களத்தில் பந்துவீசுவது ஒரு கலை வெளிப்பாடாக இருக்கும். தற்போதைய கிரிக்கெட் உலகில் அஸ்வினின் ஆட்ட நுணுக்கம் யாருக்கும் கைவரப்பெறவில்லை எனலாம். ஆடுகளம், ஆட்டச்சூழல், பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங் நுணுக்கங்கள், எதிரணி பேட்டரின் மனநிலையை கணிப்பது, அவருக்கு எதிராக வியூகம் அமைப்பது என போர் தளபதி போல் அஸ்வின் விராட் கோலி தலைமையில் செயல்பட்டு வந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்: கேப்டன்ஸி கொடுக்காததன் காரணம்?
அப்படியிருக்க விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஸியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தபோது, எவ்வித யோசனைகளும் இன்றி கேப்டன்ஸி ரோஹித் சர்மாவின் கைகளுக்குச் சென்றது. ஜஸ்பிரித் பும்ராவும் இந்திய அணியில் முக்கிய இடத்தை பெற்றாலும் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் முக்கிய அங்கமாக பார்க்கப்பட்ட அஸ்வினுக்கு கடைசி வரை ஒருமுறை கூட கேப்டன்ஸி பொறுப்போ, ஏன் துணை கேப்டன் பொறுப்போ கூட வழங்கப்படவில்லை. ரோஹித் சர்மா வெள்ளைப் பந்து பார்மட்களுக்கு கேப்டன்ஸியை பெற தகுதிபெற்றவர் என்றாலும், சிவப்பு பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குதான் நியாயப்படி கேப்டன்ஸி பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிநாட்டில் பயன்பட மாட்டார், சுழற்பந்துவீச்சாளர், தென்னிந்தியாவை சேர்ந்தவர் என இணையத்தில் பலரும் அவருக்கு கேப்டன்ஸி பொறுப்பு கொடுக்காததற்கு பல காரணங்களை அடுக்குகின்றனர். அனில் கும்ப்ளே பெங்களூருவை சேர்ந்தவரும், அவரும் சுழற்பந்துவீச்சாளர் தான் அவருக்கு மட்டும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஸி எப்படி கொடுக்கப்பட்டது என்றும் சிலரும் கேள்வி எழுப்புகின்றனர். வெளிநாட்டில் அவரை பிளேயிங் லெவனில் வைக்க இயலாது என்ற ஒற்றை காரணத்திற்காவே அவருக்கு டெஸ்ட் கேப்டன்ஸி கொடுக்கப்படவில்லை என்பதே வலுவான காரணமாக பார்க்கப்படுகிறது.
பிரியாவிடை போட்டிக் கூட இல்லையே…
டெஸ்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணமானது இல்லை. சொந்த மண்ணில் 127 இன்னிங்ஸ்களில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள அஸ்வின், வெளிநாட்டில் 71 இன்னிங்ஸில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 105 டெஸ்ட்களில் அஸ்வின் செய்துள்ள சாதனைகள் அதிகம். 21ஆம் நூற்றாண்டில் இந்திய அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் கடைசியில் ஒரு பிரியாவிடை போட்டி கூட இல்லாமல் போனதும் ரசிகர்கள் இடையே வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.