நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் பெயரை மேலும் 100 முறைகூட உச்சரிக்கட்டும். ஆனால், அவரது உண்மையான உணர்வுகள் குறித்தும் அவர்கள் பேச வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின்: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். சொல்ல வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி: அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டமேதை அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்களுக்கு, அம்பேத்கரின் பெயரை கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால் இன்னும் பல நூறு முறை அவரது பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: அம்பேத்கரை சிறுமைப்படுத்துபவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள். அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கான பின்விளைவுகளை பாஜக சந்திக்கும்.
விசிக தலைவர் திருமாவளவன்: அம்பேத்கர் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித் ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையை, தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். சங்பரிவார்கள் அம்பேத்கரை போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் வேலைகள். அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும்.
மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாத உள்துறை அமைச்சர், அம்பேத்கர் மீது வன்மத்தை கொட்டி இருப்பது பாஜகவின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், இறந்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? அம்பேத்கர் பெயரை சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும்.
தவெக தலைவர் விஜய்: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். அவர் பெயரை உள்ளமும், உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம். எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.