சென்னை: இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே பருவநிலை மாற்றத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அனைவருக்குமான காலநிலை கல்வியறிவு – திறன் மற்றும் நடவடிக்கை இடையேயான மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் காலநிலை மாற்றம் மற்றும் உலக அளவில் எடுக்கப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றம், காலநிலை கல்வியறிவு தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பேரிடர்கள் வரும்போது நாம் இயற்கையின் மீது பழியை போடுகிறோம். முதலில் நமக்கு கட்டுப்பாடுகள் உள்ளதா? ஒழுக்கத்துடன் வாழ்கிறோமா? நாம் எதுவுமே செய்யாமல் இயற்கை பேரிடர் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை நமது செயல்பாடுகள் எப்படி உள்ளதோ அதுதான் சமூகத்துக்கான நமது பங்களிப்பாக இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இயற்கை பேரிடர் 60% அதிகரித்துள்ளது. 2000 முதல் 2019-ம் ஆண்டு வரை அதிகப்படியான பேரிடர்களை சந்தித்த நாடுகள் எவை என்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளன. பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகம்.
இந்த மாதிரியான சூழலில் வாழ்ந்து வருகிறோம். வேறுவழியே இல்லை இயற்கையோடு ஒன்றிதான் நாம் வாழவேண்டும். சுற்றி வளைத்து மறுபடியும் ‘ஆர்கானிக்’ பக்கம்தான் செல்கிறோம். ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மட்டும் விழிப்புணர்வு பற்றி பேசுவதில் அர்த்தமே இல்லை. எத்தனை இயற்க்கை பேரிடர்கள் வந்தாலும் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.