கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம், மானெக்ஷா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது மிகச் பொருத்தமான இடம் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றதால் வங்கதேசம் உருவானது. இதை வெற்றி தினமாக ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.
இந்தாண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு, 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம் ராணுவ தலைமையகத்தில் இருந்து அகற்றப்பட்டு, டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மானெக்ஷா மையத்தில் வைக்கப்பட்டது. அதில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏஏகே நியாசி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா ஆகியோர் கையெழுத்திடுகின்றனர். ராணுவ உயர் அதிகாரிகள் உடன் உள்ளனர்.
இந்தப் படம் ராணுவத் தலைமையகத்தில் இருந்து அகற்றப்பட்டது குறித்து மக்களவையின் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: வெற்றி தினத்தை முன்னிட்டு, கடந்த 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடத்தை, மானெக்ஷா மையத்தில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் வைத்தனர். 1971-ம் ஆண்டு போரின் கதாநாயகன் ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா மையத்தில் இந்த வரைபடம் வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய வெற்றிக்கும், அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கும் இந்த வரைபடம் சாட்சியாக உள்ளது. இந்த படத்தை மானெக்ஷா மையத்தில் வைப்பதால், அங்கு நாள்தோறும் அதிகளவில் வரும் பார்வையாளர்கள், உலகின் பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயனடைவர். பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததற்கு சாட்சியாக இருக்கும் இந்த படத்தை மானெக்ஷா மையத்தில் வைத்துள்ளது மிக பொருத்தமான இடம். இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம் வைக்கப்பட்ட இடத்தில் ‘கரம் ஷேத்ரா’ என்ற தலைப்பில் ஒரு வரைபடம் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா – சீனா எல்லையில் உள்ள பாங்காங் சோ என்ற பனிப் மலைப் பகுதியின் வரைபடம் உள்ளது. அதில் சாணக்யா, கருடா மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அர்ஜூனனின் ரதத்தை ஓட்டிச் செல்வது போன்ற காட்சியும், இந்திய ராணுவத்தின் டாங்க்குகள் ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
மேலும் மானெக்ஷா மையத்துக்கு எதிரே புதிய தல் சேனா பவன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியின் பல இடங்களில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.