Ambedkar: “அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.

அமித் ஷா – அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் மோடி

அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால் அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும்” என எதிர்க்கட்சிகளை சாடினார். அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை” என எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உள்துறை அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானவர்கள் என்பதையும், அவர்களின் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தார்கள் என்பதையும், சங்கபரிவார் இந்திய அரசியலமைப்பிற்குப் பதிலாக மனுஸ்மிருதியை முதல் நாளிலிருந்தே அமல்படுத்த விரும்பினர் என்பதையும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை அம்பேத்கர் அனுமதிக்கவில்லை என்பதால்தான் அவர்மீது இவ்வளவு வெறுப்பு. மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் கடவுளுக்குக் குறைவானவர் அல்ல… தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழைகளின் தூதராக அவர் என்றும் இருப்பார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “ அமித்ஷா கருத்துகள் மிகவும் அருவருப்பானது. அம்பேத்கர் மீது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கொண்டுள்ள வெறுப்பை இது காட்டுகிறது. அவரது பெயரைக் கேட்டாலே கூட அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. யாருடைய முன்னோர்கள் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவபொம்மைகளை எரித்தார்களோ, அவர்கள்தான் இப்போது அம்பேத்கர் கொடுத்த அரசியல் சாசனத்தை மாற்றுவது குறித்தும் பேசிவருகிறார்கள். அதற்காக மக்கள் பாடம் கற்பித்ததால், தற்போது பாபா சாகேப் பெயரைக் கூறுபவர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். வெட்கக்கேடு! இதற்காக அமித் ஷா நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “அமித் ஷா, உங்களுக்குத் தெரியாவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது… பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கடவுளுக்குச் சமமானவர். அவர் உருவாக்கிய அரசியலமைப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் புனித நூல். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்? டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீதான பா.ஜ.க-வின் வெறுப்பு எப்போதுமே நன்கு அறியப்பட்டதாகும்.

கேசி வேணுகோபால்

மேலும் இன்று ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சரின் பரிதாபகரமான அறிக்கை, அவர்கள் டாக்டர் அம்பேத்கரை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. சாதிவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ், அவர்களின் மனுஸ்மிருதியால் முன்வைக்கப்பட்ட கொடூரமான கருத்துக்களை நிராகரித்த அம்பேத்கரை மனுஸ்மிருதியை வழிபடுபவர்கள் எப்போதும் தூற்றுவார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.