இயக்குநர் பாலா, தனது திரையுலப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது ‘வணங்கான்’ பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி இன்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ‘பாலா 25’ விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் நடிகர் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஸ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவில் பாலா குறித்தும் அவர் உடனான நினைவுகள் குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
இதுகுறித்து பேசியிருக்கும் மிஷ்கின், “பாலா எனும் கலைஞனை நேசிக்கணும். ராஜிவ் மேனன் சார் ஒரு ஸ்டூடியோவுக்குப் போயிருக்கார். அங்க 30 செருப்புகள் வெளில இருந்திருக்கு. அந்த செருப்புக்கு நடுவுல ஒருவர் அயர்ச்சியில படுத்திருக்கார். அவர் யார் நீங்கன்னு கேட்டிருக்கார். அந்த செருப்பு நடுவுல படுத்திருந்தவர்தான் ‘சேது’ எனும் படைப்பை நமக்கு கொடுத்த பாலா.
‘ஒநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் பார்த்துட்டு பாலா எனக்குக் கூப்பிட்டார். அந்தப் படம் சரியாகப் போகல. பாலா அழுது நான் பார்த்தது இல்ல. ஆனால், அவர் அன்னைக்கு அழுதார். அப்புறம் எனக்குப் படம் பன்றியானு கேட்டார். எனக்கு அந்தத் தருணத்துல வாழ்க்கைக் கொடுத்த நபர். ‘சேது’ படத்தை கிருஷ்ணவேணி தியேட்டர்ல பார்த்தேன். அங்க அந்தப் படத்துக்கு 11 நிமிடம் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தாங்க. சுரேஷ் காமாட்சி பாலாவுக்கு 25வது வருடம்னு சொன்னதும் அதை பெரிய விழாவாக கொண்டாடனும்னு சொன்னேன். இளையராஜா மாதிரி பாலாவுக்கு இறப்பே கிடையாது. கலைஞனுக்கு இறப்பே கிடையாது. ஒரு கலைஞன் பல குழந்தைகளை பெற்றெடுப்பவன். பாலா என்னை பெற்றெடுத்தான்” என்று பேசியிருக்கிறார்.