தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் ஷமி தொடர்பான கேள்விகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோகித் சர்மா தவிர்த்துள்ளார். ஷமியின் உடற்தகுதி குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி இடம் கேளுங்கள் என்றும், என்னால் பதில் சொல்ல முடியாது என்று ரோஹித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கப்பாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்துள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நொடியில் ஷமி அணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் முகமது ஷமி அணியில் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு ஷமி சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தீவிர ஓய்வில் இருந்து வந்தார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷமி சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே தான் ஷமி ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“என்சிஏவில் இருக்கும் நபர்கள் தான் முகமது ஷமி உடற்தகுதி குறித்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தற்போது மறுவாழ்வு பெற தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் இருக்கிறார். எனவே அங்கு இருப்பவர்கள் தான் எங்களுக்கு ஏதாவது அப்டேட் கொடுக்க வேண்டும். தற்போது அவர் பந்துவீசி வருகிறார் என்பது தெரியும். அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் விரும்பும் கடைசி விஷயம் என்னவென்றால், விளையாட்டின் நடுவில் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஷமி 200% பிட்டாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எந்த ஆபத்தும் எடுக்க விரும்பவில்லை. கடந்த செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்னது போல், NCAல் உள்ளவர்கள் தான் ஷமி பற்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் தீவிர பயிற்சியில் இருக்கும் ஷமி, இந்த மாதம் தொடங்கும் விஜய் ஹசாரே டிராபிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்த ஷமி நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இடம் பெறவில்லை, பிறகு ரஞ்சி டிராபியில் ஷமி விளையாடினார். அதனை தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாகா பந்து வீசி இருந்தார். ஆஸ்திரேலியா தொடரில் சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் அவ்வளவு சிறப்பாக பந்துவீசவில்லை. எனவே தான் ரசிகர்கள் ஷமி அணியில் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இருப்பினும் ஷமியின் காயம் தான் இந்திய அணியை யோசிக்க வைக்கிறது.