Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் செய்துள்ள சாதனைகள்! முழு பட்டியல்!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நடுவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். நீண்ட ஆண்டுகளாக டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் முக்கியமான வீரராக இருந்துள்ளார் அஸ்வின். இந்தியாவின் மிக வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராகவும் வலம் வந்துள்ளார். டெஸ்டில் 537 விக்கெட்கள் உட்பட மொத்தமாக இதுவரை 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் அஸ்வின் செய்துள்ள சாதனைகளை பார்ப்போம்.

அஸ்வின் செய்துள்ள சரித்திர சாதனை:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை பேட்டர்களை அவுட் செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். 198 போட்டிகளில் 19.85 சராசரியில் 268 இடது கை பேட்டர் விக்கெட்டுகளை  எடுத்துள்ளார். இதில் 6 ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (221) விக்கெட்களை எடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களில் நாதன் லயன் 188 விக்கெட்டுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இலங்கையின் முத்தையா முரளிதரனும் 11 முறை இத போல தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 முறைக்கு மேல் வேறு எந்த ஒரு வீரரும் தொடர் நாயகன் விருதை வென்றதில்லை. அஸ்வினை தவிர வேறு எந்த ஒரு இந்திய வீரரும் ஐந்து முறைக்கு மேல் தொடர் நாயகன் விருது வாங்கியதில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த இலக்கை எட்டிய 9வது பந்துவீச்சாளர் ஆனார் அஸ்வின். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவருக்கு முன்பு முரளிதரன் 87 போட்டிகளில் இந்த சாதனை படைத்தார்.

இதுவரை நடைபெற்றுள்ள 3 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் குறைந்தது 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார் அஸ்வின். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.

பந்துவீச்சு மட்டுமின்றி அஸ்வின் நல்ல பேட்டராகவும் விளையாடியுள்ளார். 106 டெஸ்டில் 6 சதங்கள் உட்பட 3,503 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகளை எடுத்த 3வது என்ற சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (3,662 ரன், 604 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (3,154 ரன், 708 விக்கெட்) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை இதுவரை 4 முறை எடுத்துள்ளார்.

அஸ்வின் சொந்த மண்ணில் இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21.57 என்ற சராசரியில் 383 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 29 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானத்தில் இருந்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட தவறவிட்டதில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.