நெல்லூரில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் தொற்று என்பது கொசுக்களால் ஏற்படும் தொற்றாகும். இதனால் மூளை மற்றும் கண் பார்வை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கர்ப்பினி பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு தலை மிக சிறியதாகவும், கண் பார்வைத்திறன் குன்றியும் பிறக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மர்ரிபாடு மண்டலம், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக அச்சிறுவனை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஒரு முறை இந்த தொற்றை உறுதி செய்வதற்காக, சிறுவனின் ரத்த மாதிரி மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அந்த கிராமம் முழுவதும் உள்ள அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யவும் அமைச்சர் ராமநாராயண ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதனால் யாரும் பயப்பட வேண்டாமெனவும் அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.