மதுரை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு ஜாமீன் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம், இவரது மகன் அலெக்ஸ், விழுத்தமாவடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்கள் மீது கீழையூர் போலீஸார் கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மகாலி்ங்கம் கைது செய்யப்பட்டார். அலெக்ஸை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மகாலிங்கம் ஜாமீன் கோரியும், அலெக்ஸ் முன்ஜாமீன் கோரியும் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தனர். மனுவில், எங்கள் மீது பி.ஆர்.புரம் புதுப்பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக கீழையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலராக இருப்பதால் எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே ஜாமீன், முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி, மனுதாரர்கள் மீது கடந்த ஆண்டிலும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. மனுதாரர்கள் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் மக்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இருவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவதால் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பது தெரியவில்லை. எனவே மகாலிங்கத்துக்கு நிபந்தனை ஜாமீனும். அலெக்ஸிற்கு முன்ஜாமீனும் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.