சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படும் ஏலகிரி மலை – மக்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா அரசு?

திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து, மிகவும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. இந்தக் குப்பைக் கூளங்களை அதிகாரிகள் கடந்த சில வருடங்களாகவே பல முறை பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தைச் சூழ்ந்து வெறும் 500.மீ தொலைவில் அரசினர்‌ ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி, நீர் ஓடை அமைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மூக்கைப் பிடித்தபடி செல்வதையும் பார்க்க முடிகிறது.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர், “நான் இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தான் வேலை செய்து கொண்டு வருகிறேன். நானே இந்த விவகாரம் குறித்துத் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளிடமும் ஊர்த்‌ தலைவரிடமும் பல தடவை பேசியுள்ளேன். இதோ கவனிக்கிறோம், உடனே‌ நடவடிக்கை எடுத்து விரைந்து சரி செய்வோம் என்று கூறுவார்கள். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நிகழாமல் இதே சூழலே நிலவிக் காணப்படுகிறது. அவர்கள் செய்வது ஒன்றுதான், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் இயந்திரங்களின் உதவியுடன் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். சிறிதளவுக் குப்பைகள் இருந்தால்கூட பரவாயில்லை… மலைபோல் குவிந்துள்ளது. அது மக்குவதற்குள் அப்படியே இன்னொரு லோடு கொட்டுவார்கள்.

அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாள்களில் மூன்று முதல் ஐந்து டிராக்டர் குப்பைகளை இங்கு வந்து கொட்டி விட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களுக்கு என்ன… எங்கிருந்தோ வருகிறார்கள், கொட்டி விட்டுச் செல்கிறார்கள். பாதிக்கப்படுவது நாங்கள்தான். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், `எங்களுக்கு உடலுக்கு எதோ பிரச்னை’ன்னு தான் உங்ககிட்ட மருத்துவமனைக்கு வர்றோம். ஆனா இந்த துர்நாற்றத்தால் எங்களுக்கு எதாவது புது வியாதி வந்துரும்போல’ என்று நாளும் அச்சப்படுகின்றனர்.

இது குறித்து பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில், “வகுப்பறையினுள் உட்காரவே முடியவில்லை. இதுபோல இருந்தால் நாங்கள் எப்படி பாடம் கவனிப்பது, சில நேரங்களில் விளையாடுதற்குக் கூட வெளியே வரமாட்டோம். சொல்ல வேண்டும் என்றால் ஒழுங்கா சாப்பிடக்கூட முடிவதில்லை. எங்கள் தலைமை ஆசிரியரும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உள்ளார். ஆனால், அதிகாரிகளோ அலட்சியமாக இருக்கின்றனர்” என்றார்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “பெரிய பெரிய உணவகங்கள், தொழிற்சாலையில் இருக்கும் பேட்டரி, பிளாஸ்டிக், பிராய்லர் கழிவுகள் போன்ற பல்வேறு தேவையற்ற பொருள்களை இங்கே வந்து கொட்டி விட்டுச் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் குப்பைகள் மண்ணுக்குள் மூழ்கி அப்படியே ஊருவதால், நாங்கள் குடிக்கும் தண்ணிரில் கலந்து வருகிறதோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் தரப்பில் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்லும்போது குப்பைகளைக் கொட்ட மாற்று இடம் ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். மீண்டும் இந்த இடத்துப் பக்கமே திரும்பவில்லை” என்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் இரண்டு முறை விளக்கம் கேட்கச் சென்றிருந்தோம். நகராட்சி அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. ஒருவரை ஒருவர் கைகாட்டி நழுவினர்.

இது மழைக்காலம்… சுகாதாரம் பேணுவதில் அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.