திருப்பூரில் 19 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ரூ.51.32 கோடி செலவில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஆற்றிய உரை: மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 200 சகோதரிகளுக்கு இன்றைக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதேபோல், வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பல்வேறு முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்திருக்கிறேன். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறேன். நம்முடைய அரசு திராவிட மாடல் அரசு. நம்முடைய முதல்வரின் அரசு என்றைக்கும் மக்களுக்கான அரசாகும். உங்களுக்காக, குறிப்பாக தாய்மார்களுக்கான, பெண்களுக்கான அரசாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே அது தெரியும்.

ஏனென்றால், முதல்வர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்தே உங்களுக்கான கையெழுத்து தான். அது தான் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இன்னும் சொல்லப்போனால் அந்தத் திட்டத்தின் மூலமாக இதுவரைக்கும் கிட்டத்தட்ட 600 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு மகளிரும் அந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 முதல் 1000 ரூபாய் வரை சேமிக்கிறார்கள்.

இப்படி பல்வேறுத் திட்டங்கள் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி மற்றும் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். அதுவும் உங்களுக்குத் தெரியும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

இந்த கடன் இணைப்பையெல்லாம், நம்முடைய முதலமைச்சர் கடனாக பார்க்கவில்லை. உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாக தான் பார்க்கிறார். எனவே, நீங்கள் நன்றாக சிறப்பாக பணியாற்றி, நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் 10 பேருக்கு வேலைக் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். வந்திருக்கக்கூடிய அனைத்து தாய்மார்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டிலான 3 பணிகள், தாட்கோ சார்பில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டிலான 2 பணிகள், மாநகராட்சி சார்பில் ரூ.192.95 கோடி மதிப்பீட்டிலான 1 பணி, நகராட்சிகள் சார்பில் ரூ.16.27 கோடி மதிப்பீட்டிலான 3 பணிகள், நெடுஞ்சாலைத்துறை (ஊரக சாலைகள்) சார்பில் ரூ.21.51 கோடி மதிப்பீட்டிலான 10 பணிகள் என மொத்தம் ரூ.250.48 கோடி மதிப்பீட்டிலான 19 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும், மாநகராட்சி சார்பில் ரூ.38.91 கோடி மதிப்பீட்டிலான 11 பணிகள், பேரூராட்சிகள் சார்பில் ரூ.7.97 இலட்சம் மதிப்பீட்டிலான 3 பணிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.6.33 கோடி மதிப்பீட்டிலான 14 பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டிலான 2 பணிகள், சுகாதாரப்பணிகள் துறை சார்பில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டிலான 6 பணிகள், உயர்கல்வித்துறையின் சார்பில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டிலான 1 பணி, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.59.00 இலட்சம் மதிப்பீட்டிலான 1 பணி என மொத்தம் ரூ.51.32 கோடி மதிப்பீட்டிலான 38 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.47.46 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 15 மகளிர் சுயஉதவிக்குழுகளைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு ரூ. 8.07 கோடி கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,900/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.45,306/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், தாட்கோ சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.53.75 லட்சம் மானிய உதவிகளையும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்., திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.