புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது பாஜக எம்பிக்களால் தான் தாக்கப்பட்டதாகவும், எனவே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “கடந்த 17ம் தேதி மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அம்பேத்கர் சிலை உள்ள இடத்தில் இருந்து மகர் துவார் வரை நாங்கள் பேரணியாகச் சென்றோம்.
நான் இண்டியா கூட்டணி எம்பிக்களுடன் சேர்ந்து மகர் துவாரை அடைந்தபோது பாஜக எம்பிக்களால் தள்ளப்பட்டேன். அதன்பிறகு, நான் என் சமநிலையை இழந்து மகர் துவாரின் முன் தரையில் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது முழங்கால்களில் இதனால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் எம்பிக்கள் நாற்காலியைக் கொண்டு வந்து, அதில் என்னை உட்கார வைத்தனர். மிகுந்த சிரமத்துடனும், எனது சக ஊழியர்களின் ஆதரவுடனும் காலை 11 மணிக்கு நான் சபைக்கு வந்தேன்.
இது தனிப்பட்ட முறையில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மீதான தாக்குதலாகவே கருதுகிறேன். எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பாஜக எம்பி பிரதாப் சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ரஜ்புத்தும் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரதாப் சாரங்கி தலையில் காயம் அடைந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் அஜய் சுக்லா தெரிவித்தார்.
“இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டதால், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டனர். பிரதாப் சாரங்கிக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆழமான வெட்டு விழுந்தது. எனவே, அவருக்கு தையல் போட வேண்டியதாயிற்று. அவரது உடல்நிலை குறித்து மதிப்பீடு நடந்து வருகிறது. முகேஷ் ராஜ்புத் மயங்கி விழுந்தார். இப்போது, அவர் சுயநினைவுடன் இருக்கிறார். எனினும், அவர் மயக்கம் மற்றும் கவலையுடன் இருக்கிறார். அவரது இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது” என்று மருத்துவ கண்காணிப்பாளர் அஜய் சுக்லா தெரிவித்தார்.
காயமடைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சாரங்கி, “ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தள்ளினார். அப்போது நான் படிக்கட்டுகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்துவிட்டேன்” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “நான் நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். ஆனால் பாஜக எம்.பி.க்கள் என்னைத் தடுத்து, என்னைத் தள்ளி, மிரட்ட முயன்றனர். இது நடந்தது. ஆம், இது நடந்தது. ஆனால் சலசலப்பால் நாங்கள் பாதிக்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. பாஜக எம்.பி.க்கள் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். பாஜக அரசியல் சாசனத்தைத் தாக்கி அம்பேத்கரின் புகழை அவமதிக்கிறது என்பதே மையப் பிரச்சினையாக உள்ளது.” என்று கூறினார்.
அம்பேத்கர் தொடர்பாக அமித் ஷா பேசிய பேச்சை மையமாக வைத்து பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்களும், அவர்களுக்கு எதிராக என்டிஏ கூட்டணி எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முதலில் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. 2 மணிக்கு இரு அவைகளும் கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.